ADDED : செப் 14, 2025 03:19 AM
புதுடில்லி:தலைநகர் டில்லியி ல் வெடிகுண்டு மிரட்டல் தொடர்கதையாகி விட்டது. டில்லி உயர் நீதிமன்றத்துக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், தாஜ் ஹோட்டல் மற்றும் துவாரகா மேக்ஸ் மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு நேற்று மிரட்டல் வந்தது.
டில்லி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இந்த ஆண்டு துவக்கத்தில் மிரட்டல்கள் வந்தன.
அதேபோல, தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகம், மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலை ஆகிய இடங்களுக்கும் கடந்த வாரம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
டில்லி உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று முன்தினம் இ-மெயில் வந்திருந்தது. அதேபோல, ஹோட்டல் தாஜ் பேலஸ் ஹோட்டல் மற்றும் துவாரகா மேக்ஸ் மருத்துவமனை ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று இ-மெயில்கள் வந்திருந்தன.
வெடிகுண்டு செயலிழப்புப் படை, மோப்ப நாய் படையினர் மற்றும் போலீசார் இரு இடங்களிலும், அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.
ஆனால், வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இரு இடங்களுக்கும் இ-மெயில் அனுப்பியவர் குறித்து, சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே டில்லியின் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர் கதையாகி விட்டது.
ஆனால், இதை புரளி என்றும் உடனடியாக முடிவு செய்ய முடியவில்லை எனவும் போலீசார் கூறினர்.
இந்த மிரட்டல் இ-மெயில்கள் அனுப்புபவரையும் கண்டுபிடிக்க முடியாமல் சைபர் கிரைம் போலீசாரும் திணறி வருகின்றனர்.