நக்சலிசத்தை ஒழிக்க உறுதியாக இருக்கிறோம்: அமித்ஷா திட்டவட்டம்
நக்சலிசத்தை ஒழிக்க உறுதியாக இருக்கிறோம்: அமித்ஷா திட்டவட்டம்
UPDATED : அக் 27, 2025 02:46 PM
ADDED : அக் 27, 2025 02:34 PM

புதுடில்லி: மார்ச் 31ம் தேதி, 2026 க்குள் நக்சலிசத்தை ஒழிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நக்சலைட்டுகளின் தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் நக்சலைட்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இதனால் அங்கு தலைமறைவாக இருக்கும் பல நக்சலைட்டுகள் சரண் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில், கான்கர் மாவட்டத்தில் நக்சல் அமைப்பின் தளபதி, 13 பெண் நக்சலைட்டுகள் உட்பட மொத்தம் 21 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர். இவர்கள் ஏராளமான ஆயுதங்களை ஒப்படைத்தனர்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சத்தீஸ்கரின் கான்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் 21 பேர் தங்கள் ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.அவர்களில் 13 பேர் நக்சல் அமைப்பில் நீண்ட காலமாக இருந்தவர்கள்.
பாஜ அரசின் அழைப்பின் பேரில் வன்முறையைக் கைவிட்டு, சரண் அடைந்ததற்கு நான் அவர்களைப் பாராட்டுகிறேன்.
இன்னும் துப்பாக்கிகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களும் விரைவில் சரணடையுமாறு மீண்டும் வலியுறுத்துகிறேன். 2026 மார்ச் 31ம் தேதிக்குள் நக்சலிசத்தை ஒழிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

