வேலைக்கு செல்லாமல் ரூ.37 லட்சம் சம்பாதித்த அதிகாரி மனைவி: ராஜஸ்தானில் வெளியான அதிர்ச்சி தகவல்
வேலைக்கு செல்லாமல் ரூ.37 லட்சம் சம்பாதித்த அதிகாரி மனைவி: ராஜஸ்தானில் வெளியான அதிர்ச்சி தகவல்
UPDATED : அக் 27, 2025 03:55 PM
ADDED : அக் 27, 2025 03:10 PM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தகவல் தொழில்நுட்பத்துறையில் மூத்த அதிகாரியாக பணியாற்றுபவரின் மனைவி, அரசு ஒப்பந்தங்களை எடுக்கும் இரண்டு தனியார் நிறுவனங்களிடம் வேலைக்கு செல்லாமல் சம்பளம் பெற்றுள்ளார். இதற்கு அவரது கணவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
ராஜஸ்தானில் தகவல்தொழில்நுட்பத்துறையின் கூடுதல் இயக்குநராக இருப்பவர் பிரதியுமான் தீக்ஷித். இவர் மீதான வழக்கு ஒன்றை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. போலீசார் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ஒரியன்புரோ சொல்யுசன்ஸ் மற்றும் ட்ரீஜென் மென்பொருள் கழகம் என்ற இரண்டு நிறுவனங்கள் அரசு ஒப்பந்தங்களை வழக்கமாக எடுக்கும். பிரதியுமான் தீக்சித் பொறுப்புக்கு வந்த பிறகு, அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கு, இரண்டு நிறுவனங்களும் தனது மனைவி பூனம் தீக்சித்திற்கு வேலை அளித்து சம்பளம் தர வேண்டும் என நிபந்தனை விதித்தார்.
இதனையடுத்து கடந்த 2019 ஜனவரி முதல் 2020 செப்டம்பர் வரை பூனம் தீக்சித்தின் 5 வங்கிக்கணக்குகளுக்கு இந்த இரண்டு நிறுவனங்களும் பல தவணைகளில் ரூ.37,54,405 செலுத்தியுள்ளன. ஆனால், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் பூனம் தீக்சித் ஒரு நாள் கூட பணிக்கு சென்றதேயில்லை. ஆனால், அவரது கணவர் போலி அறிக்கை மூலம் பூனத்தின் வருகைப்பதிவை உறுதி செய்துள்ளார். இந்த காலகட்டத்தில் அரசின் பல ஒப்பந்தங்கள் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் சென்றுள்ளன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

