பகல் கனவு காணும் இண்டி கூட்டணி; நிராகரித்த பீஹார் மக்கள்; சொல்கிறார் தர்மேந்திர பிரதான்
பகல் கனவு காணும் இண்டி கூட்டணி; நிராகரித்த பீஹார் மக்கள்; சொல்கிறார் தர்மேந்திர பிரதான்
ADDED : அக் 27, 2025 02:25 PM

பாட்னா:'பீஹாரில் காட்டு ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்கள், இன்று பாட்னாவிற்கு சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள் மற்றும் ஹிமாலயத்தை கொண்டு வர கனவு காண்கிறார்கள்,'மத்திய அமைச்சரும், பீஹார் பாஜ தேர்தல் பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பீஹார் மாநில சட்டசபைக்கு நவ., 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவ., 14ம் தேதி முடிவுகள் வெளியாகின்றன. இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருதரப்பினரும் சரமாரியான வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர்.
இந்த நிலையில், 'பீஹாரில் காட்டு ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்கள், இன்று பாட்னாவிற்கு சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள் மற்றும் ஹிமாலயத்தை கொண்டு வர கனவு காண்கிறார்கள். அவர்களை பீஹார் மக்கள் நிராகரித்து விட்டனர்,' என்று மத்திய அமைச்சரும், பீஹார் பாஜ தேர்தல் பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது; ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நிர்வாகம் முழுக்க முழுக்க ஊழல் மற்றும் வாரிசுகளின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பீஹாரை ஒரு குடும்பத்தினர் (லாலு பிரசாத்) மட்டுமே ஆட்சி செய்து வந்துள்ளனர். அதேவேளையில், அவர்களின் கூட்டணியான காங்கிரஸ் 3 தலை முறையாக ஆண்டது. இந்த காலகட்டத்தில் ஊழல், வாரிசு அரசியல் மற்றும் மக்களுக்கு துன்பம் விளைவிப்பதே அவர்களின் கொள்கைகளாக இருந்தன.
பீஹாரில் காட்டு ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்கள், இன்று பாட்னாவிற்கு சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள் மற்றும் ஹிமாலயத்தை கொண்டு வர கனவு காண்கிறார்கள். இதுபோன்ற கபடதாரிகளை பீஹார் மக்கள் முழுவதுமாக நிராகரித்து விட்டனர். கடந்த 20 ஆண்டுகளாக என்டிஏ கூட்டணியை தொடர்ந்து ஆசிர்வதித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் இந்தியாவின் கிழக்குப்பகுதியை மேம்படுத்தும் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கடந்த 20 ஆண்டுகளில் பீஹாரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பீஹாரில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ்குமாரின் தலைமையை ஏற்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி இந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும். நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராவார், இவ்வாறு அவர் கூறினார்.

