3 நாளில் 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நண்பனை பழிவாங்க நாடகமாடிய சிறுவன் கைது
3 நாளில் 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நண்பனை பழிவாங்க நாடகமாடிய சிறுவன் கைது
UPDATED : அக் 16, 2024 09:46 PM
ADDED : அக் 16, 2024 07:57 PM

மும்பை: 3 நாட்களில் 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவனை மும்பை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பணப்பிரச்னை காரணமாக நண்பனை பழிவாங்க அச்சிறுவன் மிரட்டல் விடுத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மிரட்டல்
கடந்த 14 ம் தேதி ஒரு இண்டிகோ மற்றும் 2 ஏர் இந்தியா விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நேற்று 7 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதில் டில்லியில் இருந்து அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு சென்ற விமானமும் ஒன்று. இதனையடுத்து அந்த விமானம் கனடாவில் தரையிறக்கப்பட்டது. இன்று இரண்டு விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது.
இவ்வாறு மிரட்டல் வரும் சம்பவங்கள் விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசும், விமான நிறுவனங்களும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இது குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. இதனடிப்படையில் மிரட்டல் குறித்த முழு விவரங்களையும் அளிக்கும்படி விமான நிறுவனங்களிடம் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது.
கோரிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக பார்லி., நிலைக்குழு கூடி ஆலோசனை நடத்தியது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாய்டு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். மேலும், இச்சம்பவங்களுக்கு முடிவு கட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மிரட்டல் விடுக்கும் பயணிகளை 5 ஆண்டுகள் விமானத்தில் பயணிக்க தடை விதிக்க வேண்டும் என்று விமான நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன. மேலும், மிரட்டல் காரணமாக ஏற்படும் இழப்புகளுக்கு குற்றவாளிகளிடமே இழப்பீடு வசூலிக்க வேண்டும் என ஏர் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.
மிரட்டல் சம்பவங்கள் எதிரொலியாக, விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதனிடையே, விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் தொடர்பாக சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கோவான் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது தந்தையிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. பணப்பிரச்னை காரணமாக நண்பனை பழிவாங்கும் நோக்கத்தில் இந்த மிரட்டலை அந்த சிறுவன் விடுத்துள்ளதாகவும், இதற்காக நண்பர் பெயரில் 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் போலியாக கணக்கை துவக்கி அதில் மிரட்டல் விடுத்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.