ADDED : அக் 21, 2024 12:14 AM

பெலகாவி : பெலகாவியின் சாம்ப்ரா விமான நிலையத்துக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த மிரட்டல் சென்னையில் இருந்து வந்ததாக தெரிய வந்துள்ளது.
சமீப நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் வருவது அதிகரிக்கிறது. பெங்களூரில் தனியார் பள்ளிகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் என பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. நேற்று முன்தினம், சென்னையில் இருந்து பெலகாவிக்கு வரும் விமானத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக இ - -மெயில் மூலம், பெலகாவிக்கு மிரட்டல் வந்தது.
எனவே, அந்த விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
நேற்று காலை பெலகாவி விமான நிலையத்துக்கு, ஒரு இ - மெயில் வந்தது.
அதில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த விமான நிலைய இயக்குனர் தியாகராஜ், போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அங்கு வந்த மாரிஹாளா போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், விமான நிலையம் முழுதும் சோதனை நடத்தினர்.
மோப்ப நாயும் அழைத்து வரப்பட்டது. விமான நிலையத்தில் வெடிபொருட்கள் தென்படவில்லை. அது மிரட்டல் என்பது தெரிந்தது.
இது தொடர்பாக, மாரிஹாளா போலீசார் விசாரித்த போது, சென்னையில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது தெரிந்தது.
அதை அனுப்பியது யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.
இச்சம்பவத்தால், பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.