UPDATED : அக் 15, 2026 03:53 PM
ADDED : அக் 15, 2026 03:36 PM
புதுடில்லி: டில்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு நேற்று அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் இ –மெயில்கள் வந்தன. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர், அந்த பள்ளிகளுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
கடந்த, 12ம் தேதி நொய்டாவில்உளள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதையடுத்து, செக்டார் 16ல் உள்ள ஏ.பி.ஜே., பள்ளி, ஸ்டெப் பை ஸ்டெப் பள்ளி, டில்லி பொது பள்ளி, ஜி.பி.என்., பள்ளிகள் உள்ளிட்ட பல பள்ளிகளில் வெடிகுண்டு சோதனைகள் நடந்தன. பின், அது புரளி என்பது தெரியவந்தது.
இந்நிலையில் நேற்றும் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான இ – மெயில்கள் வந்தன. குறிப்பாக, டில்லி தேசிய தலைநகர் பகுதிகளில் உள்ள பல பள்ளிகளுக்கு மிரட்டல் வந்தது. இதையடுத்து, போலீசார் உஷார் அடைந்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, வெடிகுண்டு செயலிழப்பு படை, மோப்நாய் படை மற்றும் தீயணைப்பு துறையினருடன் விரைந்தனர். மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் முழுமையான சோதனை நடந்தது. இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து, இது வெறும் மிரட்டல் தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இருப்பினும், மிரட்டல் இ–மெயில்கள் குறித்து சைபர் குற்றப்பிரிவு குழுவினர், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
