UPDATED : அக் 12, 2026 06:13 PM
ADDED : அக் 12, 2026 05:36 PM
புதுடில்லி: டில்லி மற்றும் நொய்டாவில் பள்ளிகளில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று மிரட்டல் வந்தன. போலீஸ் நடத்திய சோதனையில் புரளி என தெரிய வந்தது.
டில்லி ரோஹினியில் உள்ள வெங்கடேஷ்வர் குளோபல் பள்ளி மற்றும் மவுன்ட் அபு பப்ளிக் பள்ளி ஆகியவற்றில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக, ‘இ–மெயில்’ வாயிலாக மிரட்டல் வந்தது.
தகவல் அறிந்து போலீஸ், தீயணைப்பு படையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் படையினர் விரைந்து வந்தனர். இரண்டு பள்ளிகளிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. புரளி என உறுதி செய்யப்பட்டது. மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதேபோல, டில்லி அருகே உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் உள்ள சில பள்ளிகளுக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. சோதனையில் புரளி என உறுதி தெரிந்தது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 23ம் தேதி நொய்டாவில் உள்ள 20 பள்ளிகளுக்கும், பிப்ரவரி 19ம் தேதி 18 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. ஜூலை 13ம் தேதி கிரேட்டர் நொய்டாவில் உள்ள கவுதம் புத்தா நகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது.
