ADDED : ஆக 21, 2025 10:18 PM

புதுடில்லி:தேசிய தலைநகரில் நேற்று 50க்கும் அதிகமான பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தன.
தேசிய தலைநகரில் உள்ள கல்வி நிறுவனங் களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. மாளவியா நகரில் உள்ள எஸ்.கே.வி., மற்றும் பிரசாந்த் நகரில் உள்ள ஆந்திரா பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளுக்கு நேற்று காலை 7:40 மணி அளவில் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மிரட்டல் வந்த அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவ -- மாணவியர் வெளியேற்றப்பட்டனர். அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பதற்றம் உருவானது.
பெற்றோர் அலறி அடித்துக் கொண்டு, பள்ளிகளை நோக்கி ஓடினர். அனைத்து பள்ளிகளுக்கும் தீயணைப்பு படையினர், வெடிகுண்டு செயலிழப்பு படையினர், போலீசார் விரைந்தனர். தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
பள்ளியின் ஒவ்வொரு அங்குலமும் சோதனை செய்யப்பட்டது. எனினும் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. மின்னஞ்சலில் 5,000 முதல் 25,000 வரை அமெரிக்க டாலர் கேட்கப்பட்டிருந்ததாக தீயணைப்புப்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அனைத்து பள்ளிகளுக்கும் The Terrorizers 111 Group என்ற பெயரில் மின்னஞ்சல் வந்திருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை 32 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றும் அது தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.