ADDED : செப் 29, 2025 02:03 AM
புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று, இரண்டு பள்ளி களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. தீவிர சோதனைக்குப் பின் புரளி என அறிவிக்கப்பட்டது.
புதுடில்லி துவாரகா சி.ஆர்.பி. எப்., பப்ளிக் பள்ளி மற்றும் குதுப்மினார் அருகேயுள்ள சர்வோதயா வித்யாலயா ஆகிய பள்ளிகளுக்கு நேற்று காலை வந்த, 'இ - மெயில்' கடிதத்தில், பள்ளி வளாகத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ், தீயணைப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் விரைந்து வந்து, இரு பள்ளிகளிலும் அங்குலம் அங்குலமாக தீவிர சோதனை நடத்தினர். வெடிபொருட்கள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, புரளி என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இரு பள்ளிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தலைநகர் டில்லியில் கல்வி நிறுவனங்களை குறிவைத்து இதுபோன்ற மிரட்டல் இ-மெயில் அனுப்புவது தொடர்கதையாகி இருக்கிறது. அடிக்கடி வரும் வெடிகுண்டு மிரட்டலால் பெற்றோர் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சைபர் கிரைம் போலீசார் தீவிர முயற்சி செய்தும் மிரட்டல் இ-மெயில் அனுப்புபவரை கண்டுபிடிக்க முடியவில்லை.