எல்லை முழுவதும் பாதுகாப்பாக உள்ளது: ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி
எல்லை முழுவதும் பாதுகாப்பாக உள்ளது: ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி
ADDED : மே 02, 2024 02:38 PM

பாட்னா: 'இந்தியாவின் எல்லை முழுவதுமாக பாதுகாப்பாக உள்ளது' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பீஹார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தி உள்ளார். முந்தைய காலக்கட்டத்தில் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் கருத்துகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் இன்று இந்தியா சொல்வதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனிக்கிறது.
இந்தியா பலவீனமானது அல்ல
இந்தியாவின் எல்லை முழுவதுமாக பாதுகாப்பாக உள்ளது என்பதை நான் கூற விரும்புகிறேன். இந்தியா பலவீனமானது அல்ல. இனி தேவைப்பட்டால் எல்லை தாண்டி சென்றும் தாக்கலாம். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்த போது, அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தது. ஆனால் பா.ஜ., தலைவர்களை ஊழல்வாதிகள் என்று யாராலும் குற்றம் சாட்ட முடியாது.
காங்கிரசை சாடிய ராஜ்நாத்
இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. இந்தியா உலகின் சக்திவாய்ந்த நாடாக மாற முடியும் என்பதை அண்டை நாடுகளும் புரிந்து கொண்டன. இவ்வாறு அவர் பேசினார்.

