இரண்டுமே ஊழல் கட்சிகள் தான்! பா.ஜ., ஆம் ஆத்மி மீது பிரியங்கா தாக்கு
இரண்டுமே ஊழல் கட்சிகள் தான்! பா.ஜ., ஆம் ஆத்மி மீது பிரியங்கா தாக்கு
ADDED : பிப் 01, 2025 10:02 PM
புதுடில்லி:“பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவருமே ஊழல்வாதிகள்தான். இருவருக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை,” என, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா பேசினார்.
முஸ்தபாபாத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலரும், லோக்சபா எம்.பி.,யுமான பிரியங்கா பேசியதாவது:
நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை, பிரதமர் மோடி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். பிரதமர் மோடியை டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டுகிறார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரும்தான் ஊழல்வாதிகள். பா.ஜ.,வின் அரசியல் எப்போதுமே பிரிவினையை நோக்கித்தான் இருக்கிறது.
ஆம் ஆத்மி தலைவர்கள் பிரதமர் மோடி வசிக்கும் 'ராஜ் மஹால்' குறித்து குற்றம் சாட்டுகின்றனர். பா.ஜ., தலைவர்கள் கெஜ்ரிவால் வசித்த 'ஷீஷ் மஹால்' குறித்து பேசுகின்றனர். ஆனால், யாரும் மக்களின் பிரச்னைகள் குறித்து பேசுவதே இல்லை. அந்த இரு கட்சிகளுமே மாறிமாறி ஊழல்களை அம்பலப்படுத்தி வருகின்றன.
மக்கள் பிரச்னைகளைப் பற்றி யார் பேசுகிறன்றனர் என்பதை டில்லி மக்கள் சிந்தித்து ஓட்டுப் போட வேண்டும். மக்களின் வலியைப் புரிந்து கொண்டவர்கள் யார்?
ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க பா.ஜ., முயன்று வருகிறது. அதேபோல, தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்தும் சாலை, சுத்தமான குடிநீர், கல்வி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஆகியவற்றை ஆம் ஆத்மி நிறைவேற்றவில்லை.
ஆம் ஆத்மி கட்சி எந்தச் சூழலில் உருவானது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். - ஊழலுக்கு எதிராகப் பேசி கெஜ்ரிவால் ஒரு அரசியல் தலைவராக உயர்ந்தார். ஆனால், இப்போது கெஜ்ரிவாலுக்கும் மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது குறித்து பேசும் பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் அவர் செய்த சாதனைகளைப் பற்றி பேசுவதே இல்லை.
இரண்டு வகையான மனிதர்கள் இருக்கின்றனர் என முன்னாள் பிரதமர் இந்திரா கூறுவார். ஒருவர் அமைதியாக வேலை செய்பவர். மற்றவர் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி தன் வேலையைச் செய்யாமல், மற்றவர்களை குறை கூறிக்கொண்டே இருப்பவர்.
மோடியும் கெஜ்ரிவாலும் முதல் வகையா அல்லது இரண்டாவது வகையா? என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மோடியும், கெஜ்ரிவாலும் தங்களைத் தாங்களே தலைவர் என அழைத்துக் கொள்கின்றனர்.
பொறுப்பை ஏற்று, மக்களைப் போராட வைக்காமல், கவனத்தைத் திசை திருப்பாமல், மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க செயல்படுபவர்தான் தலைவர்.
தலைவர் என்பவர் அச்சமில்லாதவர், எதற்கும் பயப்பட மாட்டார். ராகுலைப் பார்த்தீர்களா? அவர் தான் தலைவர். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உண்மையைப் பேசுவதில் இருந்து பின்வாங்கியதே இல்லை.
தலைநகர் டில்லியில் ஷீலா தீட்சித் தலைமையிலான 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவெற்றி வருகிறது.
டில்லியில் ஷீலா தீட்சித் ஆட்சிக் காலத்தில் செய்த பணிகளுக்கு, ஆம் ஆத்மி கட்சி மற்றும் பா.ஜ., ஆகியவை இன்று பெருமை தேடிக் கொள்கின்றன. நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்காகவும் உருவாக்கப்பட்டது. அனைவருக்கும் சம உரிமை உள்ளது. அரசியலமைப்புச் சட்டம் ஓட்டுப் போடும் உரிமையை மக்களுக்கு வழங்கியுள்ளது. அந்த உரிமையை பயன்படுத்தி உங்களுக்கான அரசை தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.