கட்சி பொதுக்கூட்ட விதிகளை வகுக்க 10 நாள் அவகாசம்; தமிழக அரசுக்கு உத்தரவு
கட்சி பொதுக்கூட்ட விதிகளை வகுக்க 10 நாள் அவகாசம்; தமிழக அரசுக்கு உத்தரவு
ADDED : அக் 27, 2025 12:35 PM

சென்னை: அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு 10 நாள் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.,27ம் தேதி இரவு தவெக பிரசார கூட்டத்தில், அதன் தலைவர் விஜய் பேசியபோது, நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிக கூட்டம் கூடியது, போதிய தண்ணீர், மருத்துவ வசதி இல்லாதது, நீரிழப்பு, குழப்பத்தின் விளைவாக இச்சம்பவம் நடந்துள்ளது.
'மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் குறுகிய தெருக்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து 5 கி.மீ.,துாரத்திற்குள் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், ஊர்வலம், மாநாடு, ரோடு ஷோ நடத்துவதை தடை செய்ய வேண்டும். ஒழுங்குபடுத்த, பாதிப்புகளை தடுக்க நிலையான வழிகாட்டுதல்களை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று இந்த மனு தலைமை நீதிபதி மனீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், கட்சி பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது என்று கூறிய நீதிபதிகள், நெறிமுறைகளை வகுக்க மாநில அரசு தவறினால் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கும் என்றும் எச்சரித்தனர். அதன்பிறகு, இந்த வழக்கு விசாரணை நவ.,11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

