70 வயது மூதாட்டியை கொன்று உடல் மீது நடனமாடி வீடியோ எடுத்த சிறுவன் கைது
70 வயது மூதாட்டியை கொன்று உடல் மீது நடனமாடி வீடியோ எடுத்த சிறுவன் கைது
ADDED : ஏப் 16, 2025 04:03 AM

ஹைதராபாத் : தெலுங்கானாவில், 70 வயது மூதாட்டியை கொலை செய்து, அவரது உடல் மீது ஏறி நடனமாடி வீடியோ எடுத்த, 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் உள்ள குஷைகுடா என்ற பகுதியைச் சேர்ந்தவர், கமலா தேவி. 70. ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், 30 ஆண்டுகளுக்கு முன், கணவருடன் ஹைதராபாதில் குடியேறினார். 15 ஆண்டுகளுக்கு முன், கணவர் இறந்து விட்ட நிலையில், அவருக்கு சொந்தமான கடைகளின் வருமானத்தின் வாயிலாக வாழ்க்கையை நடத்தி வந்தார்.
இதில் ஒரு கடையில் வேலை செய்த புலம்பெயர் தொழிலாளியான, 17 வயது சிறுவனுக்கும், கமலா தேவிக்கும் இடையே சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. கமலா தேவி தன்னை துன்புறுத்தியும், அவமதித்தும் வருவதாக அந்த சிறுவன் எண்ணினான்.
கடந்த 11ம் தேதி குஷைகுடாவில் உள்ள கமலா தேவி வீட்டுக்குச் சென்ற சிறுவன், மறைத்து வைத்திருந்த இரும்புக்கம்பியால் அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்தான். பின், அவர் உடல் மீது ஏறி நடனமாடினான். இதை தன் மொபைல் போனில் அந்த சிறுவன் வீடியோ எடுத்தான். பின், கமலா தேவியின் கழுத்தில் சேலையை கட்டி மின்விசிறில் துாக்கிலிட்டு, அங்கிருந்து சிறுவன் தப்பிச் சென்றான்.
சில நாட்கள் கழித்து, கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள கமலா தேவியின் உறவினரை மொபைல் போனில் அழைத்து, கமலா தேவியை கொலை செய்து விட்டதாக அந்த சிறுவன் கூறினான். இதை உறவினர் நம்பவில்லை. உடனே, தான் கொலை செய்த வீடியோவை அவருக்கு சிறுவன் அனுப்பினான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அழுகிய நிலையில் இருந்த கமலா தேவியின் உடலை கைப்பற்றி, சிறுவனை கைது செய்தனர். சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.