ADDED : ஜன 15, 2024 12:37 AM

புதுடில்லி: விமானம் ஆறு முறை தாமதமானதால் அமெரிக்க விமானத்தை தவறவிட்ட பயணி, சமூக வலைதளத்தில், 'இண்டிகோ' நிறுவனத்தை வறுத்தெடுத்த பின், டிக்கெட் கட்டணத்தை திருப்பி அளிப்பதாகக் கூறி அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
இது தொடர்பாக, டீடி என்ற பெயரில், சமூக வலைதள கணக்கு வைத்துள்ள நபர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
என் வாழ்க்கையிலேயே மிகவும் மோசமான விமான பயணத்தை, இண்டிகோ நிறுவனத்துடன் அனுபவித்தேன்.
இரவு 10:00 மணிக்கு புறப்பட வேண்டிய கோல்கட்டா - பெங்களூரு விமானம், ஆறு முறை தாமதங்களுக்கு பின், ஏழு மணி நேரம் கழித்து, அதிகாலை 4:41 மணிக்கு புறப்பட்டது.
இதனால், அமெரிக்கா செல்லவிருந்த சர்வதேச விமானத்தை தவற விட்டேன்.
'எப்போதும் சரியான நேரத்தில்' என்பது, இண்டிகோ நிறுவனத்தின் தவறான விளம்பரம். இனி, அந்நிறுவனத்தின் விமான சேவையை பயன்படுத்த மாட்டேன்.
நள்ளிரவு 12:20 மணிக்கு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு நேரடி விமானத்தை முன்பதிவு செய்ய முடிவு செய்தேன்.
அப்போது என் பயணத்தை ரத்து செய்து, என் உடைமைகளை சரிபார்த்து தரும்படி, இண்டிகோ விமான ஊழியர்களிடம் கேட்டேன். அதற்கும் இரண்டு மணி நேரத்துக்கு மேலாகும் என, அவர்கள் கூறினர்.
நான் விமான நிலையம் வந்ததும், விமானம் தாமத மாகும் என தெரிவித்திருந்தால், வேறு விமானத்தில் பெங்களூரு சென்று சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்றிருப்பேன்.
இந்த விவகாரத்தை இண்டிகோ ஊழியர்கள் கையாண்ட விதம் ஏற்புடையதல்ல.
மற்றவர்களின் நேரம் மற்றும் பணத்திற்கு அவர்கள் எந்த மரியாதையும் அளிக்கவில்லை.
இவ்வாறு அவர் காட்டமாக பதிவிட்டு இருந்தார்.
இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்ட இண்டிகோ நிறுவனம், ஏழு நாட்களுக்குள் பயணத்துக்கான முழு கட்டணத்தை திருப்பி அளிப்பதாக உறுதி அளித்துள்ளது.