இந்திய படைகள் மார்ச் 15க்குள் வெளியேற மாலத்தீவு அரசு கெடு
இந்திய படைகள் மார்ச் 15க்குள் வெளியேற மாலத்தீவு அரசு கெடு
ADDED : ஜன 15, 2024 12:58 AM
மாலே: 'மாலத்தீவுகளில் உள்ள இந்திய படைகள் மார்ச் 15ம் தேதிக்குள் வெளியேற வேண்டும்' என அந்நாட்டு அரசு கெடு விதித்துள்ளது.
தெற்காசிய நாடான மாலத்தீவுகளின் புதிய அதிபராக முஹமது முயிசு கடந்த நவம்பரில் பதவியேற்றார்.
அதிபராக பொறுப்பேற்ற உடனேயே இந்திய படைகள் மாலத் தீவில் இருந்து வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த விவகாரத்தில் பேச்சு நடத்த ஏதுவாக இரு நாடுகளும் உயர்மட்ட குழுவை அமைத்தன.
இந்த குழுவின் 12வது கூட்டம் நேற்று மாலேவில் நடந்தது. இதில், இரு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாலத் தீவின் பொது கொள்கை செயலர் அப்துல்லா நசீர் இப்ராஹிம் கூறியதாவது:
மாலத் தீவுகளில் உள்ள இந்திய படைகள் வரும் மார்ச் 15ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என அதிபர் முஹமது முய்சு கெடு விதித்துள்ளார். இதற்கு பின், இந்திய நாட்டு ராணுவ அதிகாரிகள் மாலத் தீவுகளில் தங்க முடியாது. இது அதிபர் முஹமது முயிசு எடுத்த நிர்வாக ரீதியான கொள்கை முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.
இருப்பினும், இந்த பேச்சு குறித்து இந்திய அதிகாரிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. சீன ஆதரவு நிலைப்பாடு உடைய அதிபர் முஹமது முயிசு, சமீபத்தில் சீன சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அரசுடன் 21 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
பின் நாடு திரும்பிய அவர், 'எங்கள் நாடு சிறியதாக இருக்கலாம். ஆனால், அதற்காக எங்களை ஆளும் உரிமையை மற்றவர்களுக்கு வழங்க முடியாது' என நம் நாட்டை மறைமுகமாக விமர்சித்தார்.
லட்சத் தீவுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவு குறித்து மாலத் தீவு இணை அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள சூழலில், இந்திய படைகள் வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது-.
இதற்கிடையே, தலைநகர் மாலேவில் நடந்த மேயர் தேர்தலில் அதிபர் முஹமது முயிசுவின் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்திய ஆதரவு நிலைப்பாடுள்ள எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆடம் அசிம் வெற்றி பெற்றுள்ளார்.