ADDED : செப் 19, 2024 11:00 PM

பெங்களூரு: 'முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ஜாமின் மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், வரும் 26ம் தேதி தீர்ப்பு கூறப்படும்,' என்று கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவித்து உள்ளது.
ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 34. இவர் மீது நான்கு பலாத்கார வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். முதல் இரண்டு வழக்குகளில் அவர் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
முதல் பலாத்கார வழக்கில் ஜாமின் கேட்டும், மூன்றாவது, நான்காவது வழக்குகளில் கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமின் கேட்டும், உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுக்களை நீதிபதி நாகபிரசன்னா விசாரிக்கிறார்.
நேற்று நடந்த விசாரணையின் போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் பிரபுலிங்க நாவடகி வாதாடுகையில், ''எனது மனுதாரர் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு பின்னணியில் அரசியல் சதி உள்ளது. மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பலாத்காரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண், இப்போது புகார் அளித்தது ஏன்? புகாரில் நிறைய குளறுபடிகள் உள்ளன. மனுதாரர் கைது செய்யப்பட்டு 100 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளார். அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்,'' என்றார்.
அரசு வக்கீல் ரவிவர்மகுமார் வாதாடுகையில், ''மனுதாரர் தனக்கு எதிரான ஆதாரங்களை அழித்து உள்ளார். அவரது மொபைல் போனை இதுவரை, விசாரணை அதிகாரிகளிடம் கொடுக்கவில்லை.
''மொபைல் போனின் நிலை என்ன என்று தெரியவில்லை. வழக்குப்பதிவு ஆனதும் வெளிநாடு சென்று தலைமறைவானார். அவருக்கு ஜாமின் அளித்தால், சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் அவருக்கு ஜாமின் வழங்க கூடாது,'' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, வரும் 26ம் தேதி தீர்ப்பு அறிவிப்பதாக கூறினார்.