ADDED : ஆக 11, 2025 12:42 AM
மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் விரைவில் பேச்சு நடத்த உள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரேசில் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுாலா டா சில்வா நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்தியா உட்பட பல நாடுகளுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இறக்குமதி வரியை விதித்து சமீபத்தில் அறிவித்தார். இதன்படி, இந்தியாவைத் தவிர, தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு அதிகபட்சமாக, 50 சதவீத வரி விதித்துள்ளார்.
இதற்கிடையே, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது தொடர்ந்துள்ள போரை நிறுத்தும்படி, ரஷ்யாவுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்து வருகிறார். அதன்படி, டிரம்ப் மற்றும் புடின், வரும் 15ம் தேதி சந்தித்து பேச உள்ளனர்.
அமெரிக்காவின் அதிக வரி விதிப்புக்கு, பிரேசில் அதிபர் லுாலா டா சில்வா எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக பேச வரும்படி, டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோரிடம் பேசிக் கொள்வதாக லுாலா பதிலடி கொடுத்திருந்தார்.
அதன்படி, ஜின்பிங் மற்றும் மோடியுடன் அவர் சமீபத்தில் தொலைபேசி வாயிலாக பேசினார். இதன் தொடர்ச்சியாக புடினுடன் அவர் நேற்று பேசினார்.
இந்த பேச்சின்போது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும், உலகளாவிய பொருளாதார நெருக்கடி, உலகளாவிய அரசியல், பிரேசில் - ரஷ்யா உறவு குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.