ரூ.10 கோடி போதைப்பொருளை விழுங்கிய பிரேசில் பெண் கைது
ரூ.10 கோடி போதைப்பொருளை விழுங்கிய பிரேசில் பெண் கைது
ADDED : செப் 24, 2024 01:36 AM
மும்பை, மும்பை சர்வதேச விமான நிலையத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான கேப்சூல் மாத்திரை வடிவ 'கோகைன்' போதைப்பொருளை விழுங்கிய பிரேசில் பெண், வருவாய் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் இருந்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் பயணியர் விமானம் வந்தது.
இதில், போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதில் வந்த பயணியரை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது, பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், விமானம் தரையிறங்கும் போது தான் எடுத்து வந்த போதைப் பொருட்களை விழுங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.
அதன்பின் அப்பெண் விழுங்கிய கோகைன் போதைப்பொருள் அடங்கிய 124 கேப்ஸ்யூல்களை டாக்டர்களின் உதவியுடன் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றினர்.
அவற்றின் சர்வதேச மதிப்பு, 9.73 கோடி ரூபாய் என தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண்ணை கைது செய்த அதிகாரிகள், இதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.