ADDED : பிப் 08, 2025 01:40 AM
கலபுரகி கர்நாடகாவின் கலபுரகி நகரில் வசிப்பவர் வெங்கடேஷ், 40. இவரது மனைவி உமாதேவி, 35. சில மாதங்களாக வெங்கடேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்தது.
அவ்வப்போது இருவரும் சந்தித்து பேசிப் பழகினர். இது மனைவி உமாதேவிக்கு தெரிய வந்தது. வேறு பெண்ணுடன் தொடர்பை விட்டு விடும்படி, கணவருக்கு புத்திமதி கூறினார்.
வெங்கடேஷ் கேட்கவில்லை. இதனால் தம்பதிக்கிடையே பலமுறை சண்டை நடந்தது.
கணவரின் கால்களை உடைத்தால், வீட்டிலேயே கிடப்பார் என, உமாதேவி கருதினார். இதற்காக திட்டமிட்டார். கூலிப்படையை சேர்ந்த ஆரிப், மனோகர், சுனில் ஆகியோரை தொடர்புகொண்டு, 5 லட்சம் ரூபாய் கொடுத்தார். தன் கணவரின் இரண்டு கால்களையும் உடைக்கும்படி கூறினார்.
அவர்களும் கொள்ளையடிப்பது போன்று, வெங்கடேஷின் வீட்டுக்குள் புகுந்து, அவரை தாக்கி, இரண்டு கால்களையும் உடைத்துவிட்டுத் தப்பினர்.
தன் தந்தையின் காலை கொள்ளையர்கள் உடைத்ததாக, வெங்கடேஷின் மகன், போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பின் போலீசார் விசாரணை நடத்தி, சுனில், ஆரிப், மனோகரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போதுதான், உமாதேவியின் சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர்.