ADDED : ஜன 26, 2026 02:00 AM
புதுடில்லி: ஊழல் வழக்கில் சி.பி.ஐ., கைது செய்த ராணுவ உயரதிகாரியின் ஜாமின் மனுவை டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராணுவ அமைச்சகத்தின் ராணுவ உற்பத்தி துறை துணை திட்ட அதிகாரியாக பணியாற்றுபவர், லெப்டினென்ட் கர்னல் தீபக் குமார் ஷர்மா. ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, ஏற்றுமதி உள்ளிட்ட பணிகளுக்கு முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்.
இதனால், சர்வதேச அளவில் உள்ள தனியார் நிறுவனங்களிடம் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி சார்ந்த ஒப்பந்தங்களை இவர் இறுதி செய்து வந்தார்.
அந்த வகையில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு, ஒப்பந்தம் வழங்க 3 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக இவர் மீது கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தியதில், அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கடந்த டிச., 18ம் தேதி சி.பி.ஐ., கைது செய்தது.
இந்நிலையில், ஜாமின் கோரி, தீபக் ஷர்மா தரப்பில் டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தீபக் ஷர்மாவின் மனைவி காஜல் பலியும், ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி வருகிறார். ஊழலுக்கு துணை போனதாக இவர் மீதும் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

