லஞ்ச வழக்கு: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமின்
லஞ்ச வழக்கு: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமின்
UPDATED : மார் 20, 2024 05:39 PM
ADDED : மார் 20, 2024 01:44 PM

சென்னை: லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் 2018ல் வழக்கு பதிந்தனர். வழக்கை முடிக்க சுரேஷ்பாபுவிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக அங்கித்திவாரியை 2023 டிச.,1 ல் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, போலீசார் திண்டுக்கல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. அந்நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. அதை ரத்து செய்து ஜாமின் அனுமதிக்க வேண்டும்,'' என, உயர்நீதிமன்றத்தில் அங்கித் திவாரி மனு செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ‛‛மனுதாரருக்கு எதிரான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் போலீசாரால் தாக்கல் செய்ய முடியவில்லை. இச்சூழலில் ஜாமின் வழங்க இயலாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டார்.
இதையடுத்து ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தை அங்கித் திவாரி நாடினார். இன்று (மார்ச் 20) வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‛‛உச்சநீதிமன்றத்தின் அனுமதியில்லாமல், தமிழகத்தை விட்டு வெளியே செல்ல கூடாது' என்ற நிபந்தனைகளுடன் அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்கினர்.
அங்கித் திவாரி மனுவுக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

