ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு லஞ்சமா? ஆதாரம் கேட்டு கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்
ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு லஞ்சமா? ஆதாரம் கேட்டு கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்
ADDED : பிப் 08, 2025 01:43 AM

புதுடில்லி : ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு பா.ஜ., லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றஞ்சாட்டிய அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அது குறித்த ஆதாரங்களை வழங்கும்படி, டில்லி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
டில்லியில் மொத்தமுள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு, கடந்த 5ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், ஆளும் ஆம் ஆத்மி - பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என, கூறப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் போட்டியிடும், 16 ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு, பா.ஜ., லஞ்சம் கொடுக்க முயன்றதாக, முன்னாள் முதல்வரும், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், சமூக வலைதளத்தில் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான விசாரணைக்கு, துணை நிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார்.
இதையடுத்து, இந்த குற்றச்சாட்டு தொடர்பான விபரங்கள் மற்றும் ஆதாரங்களை வழங்கும்படி, கெஜ்ரிவாலுக்கு டில்லி ஊழல் தடுப்பு பிரிவு நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
அதில், சம்பந்தப்பட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களை தொடர்பு கொண்ட நபர்களின் மொபைல் போன் எண்கள் உள்ளிட்டவற்றை வழங்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், டில்லி மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் குற்றச்சாட்டுகளை பரப்புபவர்கள் மீது, ஏன் வழக்கு தொடரக்கூடாது என்றும் நோட்டீசில் கேட்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீசை வழங்குவதற்காக, டில்லியில் உள்ள கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் ஆகியோரது வீடுகளுக்கு, ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்று சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.