இதுக்கு மேல பேசினால்... எம்.எல்.ஏ., பேச்சுக்கு கண்டனம்; 'ஷூ' வை கையில் எடுத்த காங்., பெண் நிர்வாகி
இதுக்கு மேல பேசினால்... எம்.எல்.ஏ., பேச்சுக்கு கண்டனம்; 'ஷூ' வை கையில் எடுத்த காங்., பெண் நிர்வாகி
ADDED : செப் 12, 2024 01:46 PM

ஹைதராபாத்: தெலங்கானாவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.,வின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் பெண் நிர்வாகி காலணியை கையில் எடுத்து எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி தாவல்
தெலங்கானாவில் ஆளும் கட்சியாக இருந்த பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியை தோற்கடித்து, காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அம்மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி இருந்து வருகிறார். ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பி.ஆர்.எஸ்., கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தாவி வருகின்றனர்.
காட்டம்
தற்போது வரையில் 10 எம்.எல்.ஏ.,க்கள் கட்சி தாவியுள்ளனர். அவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால், பி.ஆர்.எஸ்., கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில், கட்சி தாவிய எம்.எல்.ஏ.,க்களை பாரதிய ராஷ்டிரிய சமிதியின் எம்.எல்.ஏ., கவுசிக் ரெட்டி கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
அண்மையில் கையில் புடவை மற்றும் வளையலுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சி தாவி எம்.எல்.ஏ.,க்கள் பேசாமல் இந்த சேலையையும், வளையலையும் அணிந்து கொள்ளுங்கள், எனக் காட்டமாக கூறியிருந்தார்.
பதிலடி
அவரது இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தெலங்கானா மகளிர் கூட்டுறவு வளர்ச்சி கழகத் தலைவியும், காங்கிரஸ் துணை தலைவருமான பந்த்ரு ஷோபா ராணி செய்தியாளர்கள் சந்திப்பில் , ஷூவை கழற்றி காண்பித்து எச்சரிக்கை விடுத்தார். கவுசிக் ரெட்டி பெண்களை இழிவுபடுத்தியதாகவும், வளையல், சேலையை காண்பித்த அவர், பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்தினால், செருப்பால் அடிப்போம் என்றும் ஆவேசமாக கூறினார்.

