மாஜி கிரிக்கெட் வீரர் அசாரூதினை தோற்கடித்த எம்.எல்.ஏ., திடீர் மரணம்!
மாஜி கிரிக்கெட் வீரர் அசாரூதினை தோற்கடித்த எம்.எல்.ஏ., திடீர் மரணம்!
ADDED : ஜூன் 08, 2025 05:06 PM

ஹைதராபாத்: மாஜி கிரிக்கெட் வீரர் அசாரூதினை சட்டசபை தேர்தலில் தோற்கடித்த பி.ஆர்.எஸ்., கட்சி எம்எல்ஏ மகந்தி கோபிநாத் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63.
தெலுங்கானாவில் 2023ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.ஆர்.எஸ்., கட்சியின் மூத்த தலைவர் மகந்தி கோபிநாத். அந்த தேர்தலில் இவர் மாஜி கிரிக்கெட் வீரர் அசாரூதினை தோற்கடித்து இருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மகந்தி கோபிநாத் கச்சிபாவ்லி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 8) காலமானார். அவருக்கு வயது 63.
1963ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி பிறந்த மகந்தி கோபிநாத், தெலுங்கு தேசம் கட்சியில் தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 2014ல் தேர்தலில் போட்டியிட்டு ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி எம்.எல்.ஏ.,வானார். 2016ம் ஆண்டு சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ்., கட்சியில் இணைந்தார்.
அதன் பின்னர் 2018, 2023ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ.,வானார். அதில் 2023ம் ஆண்டு தேர்தலில் அவர் மாஜி கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் வேட்பாளருமான முகமது அசாரூதினை தோற்கடித்தார்.
மகந்தி கோபிநாத் மறைவுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மத்திய அமைச்சரும், பா.ஜ., தலைவருமான கிஷன் ரெட்டி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த மகந்தி கோபிநாத்துக்கு சுனிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.