தீப துாணில் தீபமேற்றிய பின் சந்தன கூடு விழா நடத்த கோரிய பெண்கள் உட்பட 17 பேர் கைது
தீப துாணில் தீபமேற்றிய பின் சந்தன கூடு விழா நடத்த கோரிய பெண்கள் உட்பட 17 பேர் கைது
UPDATED : டிச 22, 2025 07:28 AM
ADDED : டிச 22, 2025 03:24 AM

திருப்பரங்குன்றம்: நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றிய பின்பே, முஸ்லிம்களின் சந்தனக்கூடு விழாவுக்கு கொடியேற்ற வேண்டும்'' என அகல்விளக்கேந்தி வந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை பார்க்கச் சென்ற பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவை தடுத்ததால் அவர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் டிச.,3 அன்று கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், மேல் முறையீட்டு வழக்கும் விசாரணையில் உள்ளது.
டிச., 3 முதல் திருப்பரங்குன்றம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு கூடுதலாக 926 போலீசார் வரவழைக்கப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். மலை மீது ஏறிச்செல்லக்கூடிய பெரிய ரத வீதி, பழநி ஆண்டவர் கோயில் சந்திப்பு, மலை படிக்கட்டுகளுக்கு முன்பு பழநி ஆண்டவர் கோயில் அருகே போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பழநி ஆண்டவர் கோயில் தெரு, கோட்டைத் தெரு பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு வசிப்போர் வீடுகளுக்கு செல்வதற்குகூட போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். டிச., 3 முதல் மலைக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.
சந்தனக்கூடு திருவிழா
முஸ்லிம்களின் சந்தனக்கூடு விழாவுக்காக பெரிய ரத வீதி பள்ளிவாசலில் இருந்து மலை மேல் உள்ள கல்லத்தி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்காக சில நாட்களுக்கு முன் திருமங்கலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தர்கா நிர்வாகிகள், சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரதிநிதிகள், வருவாய்த்துறையினர், போலீசார் பங்கேற்ற அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. சந்தனக்கூடு விழா நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்தனர். நேற்று முன்தினம் காலை மலையிலுள்ள கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு திருவிழாவுக்காக முன்னேற்பாடுகள் செய்ய 4 முஸ்லிம்கள் மலை மேல் செல்ல போலீசார் அனுமதித்தனர்.
அதற்கு மலை அடிவாரத்தில் வசிக்கும் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்துாணில் தீபம் ஏற்றிய பின்பே முஸ்லிம்களின் சந்தனக்கூடு விழாவில் கொடியேற்ற அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
17 பேர் கைது
நேற்று இரவு பள்ளி வாசலில் இருந்து தர்ஹாவுக்கு சந்தனக்கூடு விழாவுக்கான கொடியை கொண்டு செல்ல இருந்தனர். மதியம் 1:30 மணிக்கு பழநி ஆண்டவர் கோயில் தெருவில் வசிக்கும் பெண்கள் கைக் குழந்தைகளுடன், கோஷமிட்டபடி கையில் அகல் விளக்கு ஏந்தியவாறு பெரியரத வீதி நோக்கி வந்தனர். அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.
கோஷமிட்டு வந்த 14 பெண்கள் 3 ஆண்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பழநி ஆண்டவர் கோயில் தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

