டில்லி படையெடுப்புக்கு தமிழகம் அஞ்சாது: மா.செ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
டில்லி படையெடுப்புக்கு தமிழகம் அஞ்சாது: மா.செ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
ADDED : டிச 22, 2025 02:51 AM

சென்னை: 'ஓட்டுச்சாவடி வாரியாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே ஒருத்தர் தவறுதலாக விடுபட்டு இருந்தாலும், அவரின் பெயரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் 15 சதவீத வாக்காளர்களை, அதாவது 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இடம் பெயர்ந்தவர்கள் என, 66 லட்சம் பேரை நீக்கி இருக்கின்றனர்.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை ஆரம்பித்தபோதே, இது, பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்; தகுதியான தமிழக வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று, முன்கூட்டியே எச்சரித்தோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம்.
அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் களத்துக்கே வரவில்லை; துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை. அதனால்தான், நாம் சந்தேகப்பட வேண்டியதாக உள்ளது. எனவே, நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களில், நம் வாக்காளர்கள் இருக்கின்றனரா என்று கவனமாக பார்க்க வேண்டும்.
ஓட்டுச்சாவடி வாரியாக மைக்ரோலெவல் அளவில் கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே ஒருத்தர் தவறுதலாக விடுபட்டு இருந்தால் கூட, வாக்காளர் பட்டியலில் அவரின் பெயரையும் சேர்க்க வேண்டும்.
அதாவது, 168 தொகுதிகளில், 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதை நாம் ஓட்டுச்சாவடி வாரியாக சரி பார்க்க வேண்டும். உதாரணமாக, கும்மிடிப்பூண்டி தொகுதியின் முதல் ஓட்டுச்சாவடியில், 40 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் நான்கு பேர், ஓரணியில் தமிழகம் முன்னெடுப்பு வாயிலாக சேர்ந்தவர்கள்.
அவர்களில் ஒருவர் இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளனர். மற்ற மூன்று பேரை எதற்காக நீக்கியுள்ளனர் என சரி பார்க்க வேண்டும். நாம் இவ்வளவு கவனமாக இருந்தும், ஒரு ஓட்டுச் சாவடியில், 'ஓரணியில் தமிழகம்' கீழ் இணைந்த நான்கு பேர் விடுபட்டிருக்கின்றனர் என்றால், நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும்.
அடுத்ததாக புதிய வாக்காளர்கள் இணைக்கப்படுவதையும், தொடர்ந்து கவனிக்க வேண்டும். அதேபோல, ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, 68,470ல் இருந்து 75,032 ஆக அதிகரித்துள்ளது. புதிய ஓட்டுச் சாவடிகளுக்கு, முகவர்களை நியமிக்க வேண்டும்.
நம்மை நேர்மையாக நேர்வழியில் வீழ்த்த முடியாத, பாசிச சக்திகளும், எதிரிகளும், குறுக்கு வழியில் காரியம் சாதிக்க நினைப்பர். அதற்கு நாம் கடுகளவு கூட இடம் தரக்கூடாது. வெற்றிக் கோட்டை நெருங்கும் நேரத்தில், பதற்றமோ, அசதியோ கூடாது. களத்தில் நாம்தான் வலிமையாக உள்ளோம். நம் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. வெற்றியை எட்டும் வரை கவனம் சிதறாமல் உழையுங்கள். டில்லி படையெடுப்புக்கு தமிழகம் ஒரு போதும் அஞ்சாது. இவ்வாறு அவர் பேசினார்.

