டில்லியில் கட்டடம் இடிந்து விழுந்தது; 7 வயது குழந்தை பலி; 12 பேர் பத்திரமாக மீட்பு
டில்லியில் கட்டடம் இடிந்து விழுந்தது; 7 வயது குழந்தை பலி; 12 பேர் பத்திரமாக மீட்பு
UPDATED : ஜன 28, 2025 09:07 AM
ADDED : ஜன 28, 2025 09:05 AM

புதுடில்லி: டில்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், 7 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
வடக்கு டில்லியின் புராரி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த, மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி, 7 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மீட்பு பணி நடந்து வருகிறது. தற்போது வரை பலத்த காயத்துடன் 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து டில்லி முதல்வர் அதிஷி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிக்கித் தவிக்கும் மக்களுக்கு விரைவான நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும். கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. முடிந்த உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.