புர்கா அணிந்த பெண்களிடம் சோதனை: 7 போலீசார் சஸ்பெண்ட்
புர்கா அணிந்த பெண்களிடம் சோதனை: 7 போலீசார் சஸ்பெண்ட்
UPDATED : நவ 21, 2024 02:00 AM
ADDED : நவ 21, 2024 12:56 AM

லக்னோ,உத்தர பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலின் போது, புர்கா அணிந்த முஸ்லிம் பெண்களிடம் போலீசார் அடையாள அட்டை கேட்டு சோதனை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சோதனையில் ஈடுபட்ட ஏழு போலீசாரை சஸ்பெண்ட் செய்து, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஒன்பது சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று இடைத் தேர்தல் நடந்தது.
ஓட்டுப்போட வந்த, புர்கா அணிந்த முஸ்லிம் பெண்களிடம் அடையாள அட்டை கேட்டு, போலீசார் சோதனை நடத்தியதாக, எதிர்க்கட்சியான சமாஜ்வாதி குற்றஞ்சாட்டியது.
இது தொடர்பாக, அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், சமூக வலைதளத்தில் வீடியோவுடன் பதிவிட்டிருந்தார்.
அதில், 'வாக்காளர்களின் அடையாளத்தை தேர்தல் அதிகாரிகள் மட்டுமே சோதனை செய்ய முடியும். ஆனால், போலீசார் அடையாள அட்டை காட்டும்படி கூறி, ஓட்டளிக்க விடாமல் மிரட்டுகின்றனர்' என, குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக, தேர்தல் கமிஷனிலும், அக்கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் சுக்லா கூறுகையில், ''வெளி மாநிலங்களில் இருந்து சமாஜ்வாதி ஆட்களை வரவழைத்துள்ளது. புர்கா அணிந்த சில பெண்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் வைத்திருந்த அடையாள அட்டையுடன் அவர்களுடைய முகம் ஒத்துப் போகவில்லை என்பது தெரிய வந்துள்ளது,'' என, கூறிஉள்ளார்.
இந்நிலையில், இந்தப் புகார்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாநில தேர்தல் கமிஷனுக்கு, மத்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, அடையாள அட்டைகளை சரிபார்த்ததாக புகார் கூறப்பட்ட, ஏழு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.