ADDED : ஜன 12, 2024 11:03 PM
டாபஸ்பேட்: பள்ளி மாணவியை வீட்டில் அடைத்து வைத்து, பலாத்காரம் செய்த தனியார் பஸ் கிளீனர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு ரூரல் நெலமங்களா அருகே டாபஸ்பேட்டில் வசிக்கும், தம்பதியின் மகள் 14 வயது சிறுமி. தியாமகொண்டலுவில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
நான்கு நாட்களுக்கு முன்பு, பள்ளிக்குச் சென்ற சிறுமி, வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை காணவில்லை என்று டாபஸ்பேட் போலீசில் புகார் செய்தனர்.
சிறுமியுடன் படிக்கும் தோழிகளிடம் விசாரித்தபோது, தனியார் பஸ்சில் கிளீனராக வேலை செய்யும், தொட்டபல்லாப்பூரைச் சேர்ந்த ஆனந்த், 24, என்பவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் இருந்தது தெரிந்தது.
ஆனந்த்தின் மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது. ஆனால் மொபைல் போன் கடைசி சிக்னலை போலீசார் ஆய்வு செய்தபோது, எலஹங்காவில் இருப்பதாக காட்டியது. கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு ஒரு வீட்டிற்கு, போலீசார் சென்றனர்.
அந்த வீட்டில் மாணவி இருந்தார். அவரை போலீசார் மீட்டனர். ஆனந்த் கைது செய்யப்பட்டார். விசாரணையில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, சிறுமியை கடத்தி வந்து, வீட்டில் சிறை வைத்து பலாத்காரம் செய்தது தெரிந்தது.