ADDED : நவ 14, 2025 12:06 AM
மஹிபால்பூர்:தென்மேற்கு டில்லியின் மஹிபால்பூர் பகுதியில் நேற்று காலை பஸ் டயர் வெடித்ததால் ஏற்பட்ட சத்தம் உள்ளூர்வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.
மஹிபால்பூரில் உள்ள ராடிசன் அருகே நேற்று காலை 9:19 மணி அளவில் வெடிப்பு போன்ற சத்தம் கேட்டதாக டெஹி தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சத்தம் எங்கிருந்து வந்தது என்பதை பெரும்பாலானோரால் உணர முடியவில்லை.
புகார் வந்த இடத்தை நோக்கி மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அந்த பகுதி முழுவதும் விரிவான சோதனை நடத்தப்பட்டது. இதில் டி.டி.சி., பஸ் ஒன்றின் டயர் வெடித்ததே, பதற்றத்திற்கு காரணம் என்பது தெரிய வந்தது.
திங்கட்கிழமை இரவு செங்கோட்டை பகுதியில் கார் குண்டு வெடித்ததால் ஏற்பட்ட பீதி இன்னும் நகரில் நீடித்து வருவது தெரிந்தது.

