அரசை விமர்சித்த தொழிலதிபர் முதல்வர், துணை முதல்வரை சந்தித்தார்
அரசை விமர்சித்த தொழிலதிபர் முதல்வர், துணை முதல்வரை சந்தித்தார்
ADDED : அக் 22, 2025 05:21 AM
பெங்களூரு: கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர் பெங்களூரில் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதாகவும், எங்கு பார்த்தாலும் குப்பையாக இருப்பதாகவும், 'பயோகான்' நிறுவன தலைவரும், தொழிலதிருபமான கிரண் மஜும்தார் ஷா, சமீபத்தில் சமூக வலைதளத்தி ல் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த துணை முதல்வர் சிவகுமார், 'இது போன்ற பொது விமர்சனங்கள் கர்நாடகாவையும், நாட்டையும் காயப்படுத்துகின்றன. பெங்களூரின் உட்கட்டமைப்பை மேம்படுத்த கூட்டு முயற்சி தேவை' என, குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த கிரண் மஜும்தார் ஷா, 'நான் உங்களுடன் உடன்படுகிறேன். இதற்கு கூட்டு முயற்சி அவசியம். நம் நகரத்தை எப்படி சரி செய்யலாம் என, அனைவருக்கும் காட்டுவோம்' என்றார். இருவருக்கும் இடையே இப்படி காரசார விவாதம் நடந்த நிலையில், கர்நாடக அமைச்சர்கள் அனைவரும், தொழிலதிபர் கிரண் மஜும்தார் ஷாவை விமர்சித்தனர்.
இந்நிலையில், துணை முதல்வர் சிவகுமாரை, பெங்களூரில் உள்ள அவரது வீட்டில், தொழிலதிபர் கிரண் மஜும்தார் ஷா நேற்று சந்தித்து பேசினார். அப்போது, உறவினர் திருமணத்துக்கு வரும்படி அவர் அழைப்பிதழ் கொடுத்தார்.
இந்த சந்திப்பில், பெங்களூரு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையாவையும் அவர் சந்தித்து பேசினார்.