இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது 3 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு
இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது 3 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு
ADDED : நவ 12, 2024 06:07 AM

பெங்களூரு: கர்நாடகாவில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
ராம்நகரின் சென்னபட்டணா ம.ஜ.த., -- எம் எல்.ஏ., குமாரசாமி, பல்லாரி சண்டூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., துக்காராம், ஹாவேரி ஷிகாவி பா.ஜ., - எம்.எல்.ஏ., பசவராஜ் பொம்மை ஆகியோர் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டனர். அதனால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்த மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மாதம் 17ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை நடந்தது.
நேரடி போட்டி
இந்த மூன்று தொகுதிகளிலும் சுயேச்சைகள் உட்பட 45 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். சென்னப்பட்டணாவில் காங்கிரஸ் வேட்பாளர் யோகேஸ்வர், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளர் நிகில் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
ஷிகாவியில் பா.ஜ., வேட்பாளர் பரத் பொம்மை, காங்கிரசின் யாசிர் அகமது கான் பதான், சண்டூரில் காங்கிரஸ் வேட்பாளர் அன்னபூர்ணா, பா.ஜ., வேட்பாளர் பங்காரு அனுமந்த் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. மூன்று தொகுதிகளிலும் தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர்.
தேவகவுடா
சென்னப்பட்டணாவில் இம்முறை காங்கிரஸ் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் துணை முதல்வர் சிவகுமார், தீவிர பிரசாரம் செய்தார்.
இன்னொரு பக்கம், ஏற்கனவே இரண்டு முறை தோற்றுப் போன தன் மகனை, எப்படியாவது கரை சேர்த்து விட வேண்டும் என குமாரசாமி தீவிர பிரசாரம் செய்தார்.
பா.ஜ., தலைவர்களும் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். வயோதிகம், உடல்நலக் குறைவை பொருட்படுத்தாமல் பேரனுக்காக தேவகவுடாவும் களம் இறங்கினார்.
அதிருப்தி
சண்டூரிலும் பிரசாரம் களை கட்டியது. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில், பா.ஜ., தலைவர்கள் அதிருப்தியை மறந்து, ஒற்றுமையாக பிரசாரம் செய்ததை பார்க்க முடிந்தது. காங்கிரசில் அமைச்சர் சந்தோஷ் லாட், எம்.பி., துக்காராம், முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் செய்தனர்.
ஷிகாவியில் பரத் பொம்மைக்கு ஆதரவாக, அவரது தந்தை பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா ஆகியோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
வீடு, வீடாக
யாசிர் அகமது கான் பதானுக்காக அமைச்சர் ஜமீர் அகமது கான் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தனர். வழக்கம்போல பிரசாரத்தின்போது, 'நாங்கள் அதை செய்வோம். இதை செய்வோம்' என, மூன்று கட்சியினரும் கூறுவதை பார்க்க முடிந்தது.
இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6:00 மணியுடன் ஓய்ந்தது. நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதற்காக இன்று வீடு, வீடாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்திக்க கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.