வாரிசுகளின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடைத்தேர்தல் முடிவு
வாரிசுகளின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடைத்தேர்தல் முடிவு
ADDED : நவ 20, 2024 12:21 AM

நடந்து முடிந்த, மூன்று சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவு, மூன்று அரசியல் வாரிசுகளின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவாகும். எனவே நடுங்கும் இதயத்துடன் முடிவை எதிர்பார்த்து, அவர்களின் தந்தையர் காத்திருக்கின்றனர்.
கர்நாடகாவில் வாரிசு அரசியல் தவிர்க்க முடியாத விஷயமாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் தலைவர்களின் குடும்பத்தினருக்கு 'சீட்' அளிக்கப்படுகிறது. சமீபத்தில் சென்னப்பட்டணா, ஷிகாவி, சண்டூர் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலிலும், குடும்பத்தினரே களமிறங்கினர்.
* 23ல் முடிவு
ஷிகாவியில் பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை மகன் பரத், சென்னப்பட்டணாவில் மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில், கூட்டணி வேட்பாளராகவும்; சண்டூரில் எம்.பி., துக்காராமின் மனைவி அன்னபூர்ணா காங்கிரஸ் வேட்பாளாகவும் போட்டியிட்டனர். ஓட்டுப்பதிவு முடிந்துள்ளது. வரும் 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளது.
மூன்று முக்கியமான குடும்பங்களின் அரசியல் எதிர்காலத்தை, இந்த தேர்தல் முடிவு தீர்மானிக்கும். அதே போன்று, சென்னப்பட்டணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட யோகேஸ்வருக்கும், இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவு, வாக்குறுதி திட்டங்களுக்கு மக்களின் ஆதரவு உள்ளதா, வக்பு சொத்து விவாதம் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பது தெரியும். எனவே இடைத்தேர்தல் முடிவை, மூன்று கட்சிகளும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
அடுத்த வாரிசு யார்?
1. நிகில் குமாரசாமி, யோகேஸ்வர் போட்டியிட்ட சென்னப்பட்டணா, 'ஹைவோல்டேஜ்' தொகுதியாக இருந்தது. தொகுதியை கைப்பற்றியே ஆக வேண்டும் என, மத்திய அமைச்சர் குமாரசாமி, துணை முதல்வர் சிவகுமார் தீவிர பிரசாரத்தில் இறங்கினர். தொகுதியில் போட்டியிட்ட நிகில், யோகேஸ்வர் என, இருவருமே இரண்டு முறை தோற்றவர்கள்.
மீண்டும் தோற்பவருக்கு, அரசியில் பின்னடைவு ஏற்படும். வெற்றி பெற்றவருக்கு அரசியல் எதிர்காலம் வளமான அஸ்திவாரமாக அமையும். நிகில் வெற்றி பெற்றால், முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை வாரிசு, மக்கள் தலைவராகலாம். குடும்ப அரசியலை மக்கள் வெறுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். முதல்வர், துணை முதல்வருக்கு பின்னடைவு ஏற்பட்டதாக கருதலாம். கட்சி தாவிய யோகேஸ்வருக்கு, மக்கள் பாடம் கற்பித்ததாக இருக்கும்.
2. சண்டூர் தொகுதியில், காங்கிரஸ் எம்.பி., துக்காராம், போராடி தன் மனைவி அன்னபூர்ணாவுக்கு சீட் வாங்கி கொடுத்தார். அன்னபூர்ணா வெற்றி பெற்றால், குடும்ப அரசியலுக்கு முக்கியத்துவம் கிடைத்ததாக கருதலாம். பா.ஜ.,வின் பங்காரு ஹனுமந்து வெற்றி பெற்றால், புதிய முகத்தை மக்கள் ஆதரித்ததாக நினைக்கலாம். பா.ஜ.,வுக்கு பல்லாரியில், பழைய, 'கெத்து' திரும்பியது. ஆளுங்கட்சியை விட, எதிர்க்கட்சி மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக இருக்கும்.
3. ஷிகாவி தொகுதியில், பா.ஜ., எம்.பி., பசவராஜ் பொம்மையின் மகன் பரத் களமிறங்கினார். இவரும் பொம்மை குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை வாரிசுதான். பரத் வெற்றி பெற்றால், மூன்றாவது தலைமுறைக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததாக நினைக்கலாம்.
- நமது நிருபர் -