சிஏஏ, என்ஆர்சி, பொது சிவில் சட்டம் எல்லாம் சதித்திட்டம்: மம்தா குற்றச்சாட்டு
சிஏஏ, என்ஆர்சி, பொது சிவில் சட்டம் எல்லாம் சதித்திட்டம்: மம்தா குற்றச்சாட்டு
ADDED : மே 13, 2024 05:01 PM

கோல்கட்டா: சிஏஏ (குடியுரிமை திருத்தச் சட்டம்), என்ஆர்சி (தேசிய குடிமக்கள் பதிவேடு), யுசிசி (பொது சிவில் சட்டம்) ஆகியவை ஒரு பயங்கரமான சதித்திட்டம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக பங்கானில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது: சிஏஏ, என்ஆர்சி ஆகியவை ஒரு பயங்கரமான சதி. சிறுபான்மையினர், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பழங்குடியினருக்கு இருப்பு இருக்காது, ஹிந்துக்களுக்கும் இருப்பு இருக்காது, 'ஒரே தேசம்-ஒரே அரசியல் கட்சித் தலைவர்' என்ற ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் (யுசிசி) என்ற மற்றொரு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தேர்தல் வராது, இந்திய குடியரசு ஒழிக்கப்படும், அரசியலமைப்பு நீக்கப்படும், வரலாறு மாறும், கல்வி மாறும். என்.ஆர்.சி.,யை நான் அனுமதிக்க மாட்டேன். அசாமில் 19 லட்சம் ஹிந்து பெங்காலி மக்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். என் பெற்றோரின் பிறந்த தேதி கூட எனக்கு தெரியாது; அப்படியிருக்கையில் அவர்களின் பிறப்பு சான்றிதழை கேட்டால், நான் எங்கு சென்று வாங்குவது?
உங்களிடம் 50 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றிதழ்கள் ஏதாவது கேட்டால், முதலில் சிஏஏ.,விற்கு விண்ணப்பிக்குமாறு பா.ஜ., வேட்பாளர்களிடம் சொல்லுங்கள். சிஏஏ.,வுக்கு விண்ணப்பித்தால் வெளிநாட்டவர்கள் ஆகிவிடுவார்கள் என்பதால் அவர்கள் விண்ணப்பிக்கவில்லையா? அவர்களே விண்ணப்பிக்காத போது, நீங்கள் ஏன் விண்ணப்பிக்க வேண்டும்?. இவ்வாறு அவர் பேசினார்.