போரை நிறுத்துமாறு ரஷ்யாவை கட்டாயப்படுத்தும் வலிமை டிரம்புக்கு உண்டு: ஜெலன்ஸ்கி நம்பிக்கை
போரை நிறுத்துமாறு ரஷ்யாவை கட்டாயப்படுத்தும் வலிமை டிரம்புக்கு உண்டு: ஜெலன்ஸ்கி நம்பிக்கை
ADDED : ஆக 18, 2025 09:16 PM

வாஷிங்டன்; போரை நிறுத்தி பிராந்தியத்தில் அமைதியை எற்படுத்த ரஷ்யாவை கட்டாயப்படுத்தும் வலிமை அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உண்டு என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் இருவரும் அலாஸ்காவில் அண்மையில் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா, உக்ரைன் போர் நிறுத்தம் பற்றி எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருப்பினும், முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதன் அடுத்த கட்டமாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வெள்ளை மாளிகையில் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந் நிலையில், போரை நிறுத்தி பிராந்தியத்தில் அமைதியை எற்படுத்த ரஷ்யாவை கட்டாயப்படுத்தும் வலிமை அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உண்டு என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.
இதுகுறித்து, அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
அதிபர் டிரம்ப், என்னுடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை வாஷிங்டனுக்கு அழைத்துள்ளார். இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானது.
ஐரோப்பாவில் ஒரு நாட்டின் அமைதியை பற்றி பேசும் போது, அது முழு ஐரோப்பாவுக்கான அமைதியை குறிக்கிறது. போரை முடிவுக்கு கொண்டுவர, நம்பிக்கையான பாதுகாப்பை உறுதி செய்ய அதிகபட்ச முயற்சியுடன் தொடர்ந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எங்கள் நாட்டில் உள்ள நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல்கள் இன்னமும் தொடர்கின்றன.2 குழந்தைகள் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர். ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்திய போது, மக்கள் தூங்கிக் கொண்டு இருந்தனர்.
ரஷ்யாவை வலிமையின் மூலம் மட்டுமே அமைதிக்கு தள்ள முடியும். அந்த வலிமை அதிபர் டிரம்புக்கு உள்ளது. அமைதியை ஏற்படுத்த நாம் எல்லாவற்றையும் சரியாக செய்ய வேண்டும்.
இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.