ஆத்தாடி...! வெறும் 50 கிராம், மதிப்போ ரூ.850 கோடி...! மொத்தமாய் 'ஷாக்' ஆனது பீகார் போலீஸ்
ஆத்தாடி...! வெறும் 50 கிராம், மதிப்போ ரூ.850 கோடி...! மொத்தமாய் 'ஷாக்' ஆனது பீகார் போலீஸ்
ADDED : ஆக 17, 2024 10:52 AM

பாட்னா: அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும், 850 கோடி ரூபாய் மதிப்புள்ள கதிரியக்க தனிமம் சிக்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சோதனை
இதுபற்றி கூறப்படுவதாவது; கோபால்கஞ்ச் மாவட்டம், குசாய்கட் அருகே பல்தேரியில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த 8ம் தேதி உள்ளூர் போலீசார், சிறப்பு அதிரடிப்படையினர், நுண்ணறிவுப் பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர்.பளபள பொருள்
அவர்கள் வைத்திருந்த ஒரு குடுவை, அதனுள் பளபளப்பாக காணப்பட்ட ஒரு பொருள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 50 கிராம் எடை கொண்ட அந்த பொருளை பறிமுதல் செய்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். அணுகுண்டு
தாங்கள் 3 பேரும் கடத்தி வந்தது, அணுகுண்டு தயாரிக்கப் பயன்படும் கதிரியக்கத்தன்மை கொண்ட செயற்கை ரசாயன தனிமம் கலிபோர்னியம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் சர்வதேச சந்தையில் ஒரு கிராம் கலிபோர்னியம் தனிமத்தின் மதிப்பு ரூ.17. கோடியாகும். 50 கிராம் என்னும்போது அதன் சர்வதேச மதிப்பு ரூ.850 கோடியாக மதிப்பிடப்பட்டது.
விவகாரம் பெரிய அளவில் இருக்கும் என்பதால் போலீஸ் ஸ்டேஷன் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பிரத்யேக உடை அணிந்த அணு விஞ்ஞானிகள் டில்லி, மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.
கடத்தி வந்த 3 பேரின் பெயர்கள் சோட்டிலால் பிரசாத், சந்தன்குப்தா, சந்தன்ராம் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
விசாரணை தீவிரம்
3 பேரும் எங்கிருந்து இந்த தனிமத்தை கடத்தி வந்தனர், அவர்களுக்கு ஏஜெண்டாக யாரேனும் இருக்கின்றனரா? என்றெல்லாம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.
கடைசியில் ஆய்வு முடிவுகள் வந்துள்ளன. அதன்படி, கைப்பற்றப்பட்ட கதிரியக்க தனிமம், கலிபோர்னியம் இல்லை; இது திறன் குறைந்த வேறு வகை கதிரியக்க தனிமம் என தெரிய வந்துள்ளது. இதனால் பீகார் போலீசார் நிம்மதி அடைந்துள்ளனர்.

