2 சுரங்கப் பாதைகளில் கேமரா பொதுப்பணித் துறை திட்டம்
2 சுரங்கப் பாதைகளில் கேமரா பொதுப்பணித் துறை திட்டம்
ADDED : மே 09, 2025 09:22 PM
புதுடில்லி:தெற்கு டில்லியில் இரண்டு முக்கிய சுரங்கப் பாதைகளில் மழைக்காலத்துக்கு முன், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த பொதுப் பணித்துரை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, துறையின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மழைக்காலத்தில் அதிகளவில் வெள்ளம் தேங்கும் சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகள் கண்டறியப்பட்டுள்ளன. வெள்ளத்தை உடனடியாக அகற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மழைநீர் வடிகால்வாய் மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
மாநகர் முழுதும் சுரங்கப் பாதைகள் மற்றும் வெள்ளம் அதிகம் தேங்கும் சாலைகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மழைக் காலத்தில், சுரங்கப் பாதைகளின் நிலையை வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வெள்ளத்தை அகற்ற உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
வெள்ளம் அதிகரித்துக் கொண்டே இருந்தால், சுரங்கப் பாதையில் போக்குவரத்தை திருப்பிவிட போலீசுக்கு அறிவுறுத்தப்படும்.
தெற்கு டில்லியில் மூல்சந்த் மற்றும் பிரஹ்லாத்பூர் சுரங்கப் பாதைகளில் எட்டு புல்லட் கேமராக்கள் மற்றும் மூன்று டோம் கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெய்த கனமழையில் இரண்டு சுரங்கப் பாதைகளும் வெள்ளத்தில் மூழ்கின.
இந்தச் சுரங்கப் பாதை வெள்ளத்தி மூழ்கினால், தெற்கு மற்றும் தென்கிழக்கு டில்லி இடையேயான போக்குவரத்து ஸ்தம்பித்து விடும்.
அதேபோல, வெள்ளம் அதிகளவில் தேங்கும் மத்திய டில்லி ஐ.டி.ஓ., மற்றும் அதைச் ஒட்டிய பகுதிகளில் 1,800 'மோட்டார் பம்ப் செட்'கள் வாடகைக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஐ.டி.ஓ.,வில் வெள்ளம் தேங்குவதை தவிர்க்க, இரண்டு இடங்களில் புதிய வடிகால்வாய் அமைக்கப்படுகிறது.
கடந்த, 2023ல் டில்லி மாநகரில் வெள்ளம் தேங்கும் 308 இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அதேபோல, டில்லி மாநகரப் போலீசின் போக்குவரத்துப் பிரிவு மொத்தம் 445 வெள்ளம் தேங்கும் இடங்களை இந்த ஆண்டு அடையாளம் கண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், 335 இடங்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.