ஹமாஸ் பிடியில் இருக்கும் ஹிந்து இளைஞர்: விரைவில் விடுதலையாக வாய்ப்பு
ஹமாஸ் பிடியில் இருக்கும் ஹிந்து இளைஞர்: விரைவில் விடுதலையாக வாய்ப்பு
ADDED : அக் 10, 2025 08:47 PM

காசா: இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்துச் சென்ற பிணைக்கைதிகளில் ஹிந்து மதத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் அடக்கம். நேபாளத்தை சேர்ந்த அவர் விவசாய பயிற்சிக்காக சென்ற போது சிக்கிக் கொண்ட அவர், விரைவில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2023ம் ஆண்டு அக்., 7 ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அதில் பல வெளிநாட்டினரும் அடக்கம். அவர்களில் நேபாளத்தை சேர்ந்த பிபின் ஜோஷி(23) என்ற இளைஞரும் ஒருவர் ஆவார். ஹமாஸ் பிடியில் இருந்த ஒரே ஹிந்து மத இளைஞர் ஆவார்.
அவர் விவசாய பயிற்சி திட்டத்துக்காக நேபாளத்தை சேர்ந்த மாணவர் குழுவுடன் இணைந்து பிபின் ஜோஷி இஸ்ரேல் சென்று இருந்தார். ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய அன்று அவர் உயிரிழந்திருக்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால், அவர் சமயோசிதமாக செயல்பட்டதால் உயிர் தப்பியதுடன் தனது நாட்டைச் சேர்ந்த இளைஞர்களை காப்பாற்றினார். பல இஸ்ரேலியர்களின் உயிரையும் பாதுகாத்தார்.
இருப்பினும் அவர் ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் சிக்கிக் கொண்டார். தான் பிடிபடுவோம் என தெரிந்த உடன் உடனடியாக உறவினர்களுக்கு மொபைல்போனில் குறுஞ்செய்திகளை அனுப்பினார். அதில், ' தனக்கு ஏதாவது ஆனால், தனது பெற்றோரை பாதுகாக்க வேண்டும்' எனத் தெரிவித்து இருந்தார்.
இதனால், அவரது பெற்றோர் கவலையடைந்தனர். அவரை மீட்க வேண்டும் என அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். முன்பு போர் நிறுத்தம் ஏற்பட்ட போது, பல பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். இன்னும் 47 பேர் பிணைக்கைதிகளாக உள்ளார் அவர்களில் பிபின் ஜோஷி இல்லை. அவர் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதனால், அவர் உயிரிழந்து இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.
இந்நிலையில் டிரம்ப்பின் முயற்சி காரணமாக இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் காசாவில் இருந்து இஸ்ரேலிய ராணுவம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அடுத்த 72 மணி நேரத்துக்குள் பிணைக்கைதிகள் விடுதலையை ஹமாஸ் அமைப்பினர் உறுதி செய்ய வேண்டும் என்பது நிபந்தனையாக உள்ளது.
இந்நிலையில் பிணைக்கைதிகள் குறித்த வீடியோ ஒன்றை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டு உள்ளனர். அதில் பிபின் ஜோஷியும் உள்ளார். அந்த வீடியோவை பார்த்த பெற்றோரும் மகனை உறுதி செய்துள்ளனர்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: '' எனது பெயர் பிபின் ஜோஷி. நான் நேபாளத்தை சேர்ந்தவன். 23 வயதாகிறது. படித்து சம்பாதிக்கும் என்ற திட்டத்துக்காக இங்கு வந்தேன் . நான் மாணவன்'' எனக்கூறியுள்ளார்.
இதனையடுத்து பிபின் ஜோஷி விரைவில் விடுதலை செய்யப்படுவார் என அவரது குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.