14 லோக்சபா தொகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரம்! 7ம் தேதி 2ம் கட்ட ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடுகள் தயார்
14 லோக்சபா தொகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரம்! 7ம் தேதி 2ம் கட்ட ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடுகள் தயார்
ADDED : மே 03, 2024 11:33 PM

தார்வாட் : கர்நாடகாவில் இரண்டாம் கட்டமாக, வரும் 7ம் தேதி, 14 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடப்பதால், நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால், இறுதிக்கட்ட பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுப்பதிவுக்கு வேண்டிய ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஏப்ரல் 26ம் தேதி 14 தொகுதிகளுக்கும்; மே 7ம் தேதி 14 தொகுதிகளுக்கும் என இரண்டு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதன்படி, முதல் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி, 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. சராசரியாக 69.56 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.
* 227 வேட்பாளர்கள்
இரண்டாம் கட்டமாக, சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா - தனி, கலபுரகி - தனி, ராய்ச்சூர் - எஸ்.டி., பீதர், கொப்பால், பல்லாரி - எஸ்.டி., ஹாவேரி, தார்வாட், உத்தர கன்னடா, தாவணகெரே, ஷிவமொகா ஆகிய 14 தொகுதிகளுக்கு, வரும் 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
பா.ஜ., காங்கிரஸ் தலா 14 வேட்பாளர்கள் உட்பட 206 ஆண்கள், 21 பெண்கள் என மொத்தம் 227 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிகளில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நாராயணசாமி, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட தேசிய, மாநில தலைவர்கள் பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றனர்.
மற்றொரு பக்கம், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்.பி., ராகுல், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலர் பிரியங்கா, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் உட்பட பலரும் காங்., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.
* நாளை ஓய்கிறது
ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன், பிரசாரம் ஓய வேண்டும். அந்த வகையில், இரண்டாம் கட்டமாக தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளிலும் நாளை மாலை 6:00 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
இதனால், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில், சிக்கோடியில் அமித் ஷா; ஷிவமொகா, தார்வாடில் எடியூரப்பா, அண்ணாமலை; விஜயபுராவில் விஜயேந்திரா; தாவணகெரேவில் யதுவீர்; பீதரில் அசோக்; உத்தர கன்னடா, ஹாவேரியில் சித்தராமையா, சிவகுமார்; ராய்ச்சூரில் குமாரசாமி பிரசாரம் செய்தனர்.
பிரசாரத்துக்கு இன்றும், நாளையும் மட்டுமே நேரம் இருப்பதால், இறுதிக்கட்ட பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். நேரத்தை வீணடிக்காமல், சேர்ந்து செல்வதை விட, தொகுதிகளை பிரித்து பிரசாரம் செய்வதற்கு, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
* தேர்தல் ஏற்பாடுகள்
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக அனல் பறக்கும் பிரசாரத்தை நடத்த உள்ளனர். சிறிய சிறிய கூட்டங்கள் நடத்துவதை விட, இரண்டு, மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு பிரசார பொது கூட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர்.
இதற்கிடையில், ஓட்டுப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் துரிதமாக செய்து வருகிறது. இதற்காக பெங்களூரில் இருந்து மாநில தலைமை தேர்தல் அலுவலகத்தின் உயர் அதிகாரிகள், வட மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.
அவ்வப்போது, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். இறுதி கட்டத்தில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபடும் வாய்ப்பு உள்ளதால், கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். தேர்தல் நடக்கும் மாவட்டங்களின் எல்லைகள், அண்டை மாநில எல்லைகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.