டாக்டர்கள் மீது வழக்கு தொடர முடியுமா? உச்ச நீதிமன்ற அமர்வு விளக்கம்
டாக்டர்கள் மீது வழக்கு தொடர முடியுமா? உச்ச நீதிமன்ற அமர்வு விளக்கம்
UPDATED : அக் 27, 2024 01:29 AM
ADDED : அக் 27, 2024 12:46 AM
புதுடில்லி: உரிய கல்வித்தகுதி, பணித்திறன் இல்லாதது, சிகிச்சையின்போது அந்தத் திறனை சரியாக பயன்படுத்தாதது போன்ற காரணங்களுக்காக மட்டுமே, டாக்டர்கள் மீது, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக வழக்கு தொடர முடியும் என, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகராக உள்ள சண்டிகரில் அமைந்துள்ளது, முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்.
அபராதம்
இங்கு, தன் இளம் மகனுக்கு, 1996ல் கண் சிகிச்சை அளித்த டாக்டர் நீரஜ் சூட், பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
'வலது கண்ணைவிட இடது கண் சற்று மாறுபட்டிருந்தது. இதற்கு இடது புருவத்தை சற்று உயர்த்த, சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரிசெய்ய முடியும் என, டாக்டர் நீரஜ் சூட் தெரிவித்தார்.
'அதன்படி செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின், மகனுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது' என, மனுவில் அந்த சிறுவனின் தந்தை கூறியிருந்தார்.
இது தொடர்பாக விசாரித்த மாநில நுகர்வோர் நீதிமன்றம், 2005ல் மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் நீதிமன்றம், டாக்டர் கவனக்குறைவாக செயல்பட்டதாக உத்தரவில் கூறியிருந்தது.
டாக்டர் நீரஜ் சூட்டுக்கு, 3 லட்சம் ரூபாயும், மருத்துவமனைக்கு, 50,000 ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மருத்துவமனை சார்பிலும், பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையின் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, பங்கஜ் மிட்டல் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
டாக்டர்களிடம் இருந்து சிறந்த மருத்துவ சேவையை எதிர்பார்க்கிறோம். அவ்வாறு உரிய சிகிச்சை அளிக்கும்போது, அதையும் தாண்டி பிரச்னைகள் ஏற்பட்டால், அதை பணியின் கவனக்குறைவாக கருத முடியாது.
குணப்படுத்த வேண்டும் என்பதே டாக்டர் களின் நோக்கமாக இருக்கும். அதையும் மீறி, சில நேரங்களில் வேறு சில காரணங்களால் சிகிச்சை பலனளிக்காமல் போய்விடலாம். இதற்காக டாக்டர்களை குற்றம் கூற முடியாது.
நடவடிக்கை
உரிய கல்வித் தகுதி மற்றும் பணித்திறன் இல்லாதது, சிகிச்சையின்போது அந்தத் திறனை சரியாக பயன்படுத்தாதது போன்ற காரணங்களுக்காக மட்டுமே, டாக்டர்கள் மீது பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த குறிப்பிட்ட வழக்கில், டாக்டர் மற்றும் மருத்துவமனை கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கூற முடியாது.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.