உடல் உறுப்பு தானம் பெறாத 11 அரசு மருத்துவமனைகள்; அமைச்சர் அதிருப்தி
உடல் உறுப்பு தானம் பெறாத 11 அரசு மருத்துவமனைகள்; அமைச்சர் அதிருப்தி
UPDATED : செப் 24, 2025 03:39 AM
ADDED : செப் 24, 2025 03:37 AM

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களின், 268 குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர். அதே நேரம், உறுப்பு தானம் பெறாத, 11 அரசு மருத்துவமனைகள் மீது, அமைச்சர் சுப்பிரமணியன் அதிருப்தியை வெளிப் படுத்தினார்.
தமிழக உறுப்பு மாற்று ஆணையம் சார்பில், 'உடல் உறுப்பு தான தினம் - 2025' நிகழ்வு, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.
இதில், 2024ம் ஆண்டு மூளைச்சாவு அடைந்த, 268 பேரின் உடல் உறுப்புகளை தானம் அளித்த குடும்பத்தினரை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கவுரவப் படுத்தினார்.
பின், அமைச்சர் சுப்பிர மணியன் பேசியதாவது:
மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகள் தானம் செய்வோருக்கு, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என, அறிவிக்கப்பட்ட பின், 522 பேரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டு பெரும்பாலான அரசு மருத்துவமனைகளிலும் உடல் உறுப்பு தானம் பெறப்பட்டுள்ளன.
ஆனால், நாகப்பட்டினம், கரூர், சிவகங்கை, கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், உடல் உறுப்பு தானம் பெற, ஒரு முயற்சி கூட எடுக்காதது வருத்தமாக உள்ளது.
இந்த நான்கு மருத்துவமனைகளுடன், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலுார், ஓமந்துாரார் அரசு பல் நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரி, கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை ஆகிய, 11 மருத்துவ மனைகளில், உடல் உறுப்பு தானம் பெற எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை.
அனைத்து மருத்துவ கல்லுாரி மருத்துவ மனைகளும் உடல் உறுப்புகள் தானம் பெற்றன என்ற நிலையை, அடுத்த ஆண்டாவது அடைய வேண்டும்.
அதேநேரம், கடந்தாண்டு சென்னை மருத்துவ கல்லுாரி, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரிகளில், அதிகளவில் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது, 23,180 பேர் உடல் உறுப்புகள் தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.