வாரணாசியில் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: கனடா நாட்டு பயணி கைது
வாரணாசியில் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: கனடா நாட்டு பயணி கைது
ADDED : ஏப் 27, 2025 07:22 PM

வாரணாசி; வாரணாசி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கனடாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:
உ.பி., மாநிலம் வாரணாசி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு இண்டிகோ விமானம் ஒன்று நேற்றிரவு புறப்பட்டது. அப்போது அந்த விமானத்தில் இருந்த வெளிநாட்டைச் சேர்ந்த பயணி, வெடிகுண்டை ஒருவர் வைத்திருப்பதாக கூற அங்கே பரபரப்பு எழுந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் தீவிர சோதனை நடத்த, வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் பின்னர், அந்த விமான வாரணாசி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தில் கனடாவைச் சேர்ந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து கோம்தி பகுதி காவல் உதவி கமிஷனர் ஆகாஷ் படேல் கூறியதாவது;
ஏப்.26ம் தேதி வாரணாசியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இருந்த ஒரு பயணி, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார். உடனடியாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு, விமானம் வாரணாசி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானிகள், அவர்களின் உடமைகள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டன. அதன் பின்னரே அது புரளி என்பது தெரிய வந்தது. இந்த புரளியைக் கூறிய கனடாவைச் சேர்ந்த நிஷாந்த் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
விமான நிலைய நடவடிக்கைகளை தாமதப்படுத்த அவர் தவறான தகவலை அளித்தது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதியப்பட்டு, கனடா நாட்டு தூதரகத்திற்கும் தெரியப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.