கனடா அமைச்சர் - பிரதமர் மோடி சந்திப்பு; இரு நாட்டு உறவை வலுப்படுத்த உறுதி
கனடா அமைச்சர் - பிரதமர் மோடி சந்திப்பு; இரு நாட்டு உறவை வலுப்படுத்த உறுதி
ADDED : அக் 14, 2025 06:10 AM

புதுடில்லி : அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
வட அமெரிக்கா நாடானா கனடாவின் வெளியுறவு அமைச்சராக, இந்திய வம்சவாளியான அனிதா ஆனந்த் கடந்த மே மாதம் பொறுப்பேற்றார். அமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக, அவர் நேற்று முன்தினம் டில்லி வந்தார். விமான நிலையத்தில். அனிதா ஆனந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பிரதமர் மோடியை, அனிதா ஆனந்த் டில்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா - கனடா இடையிலான உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி, அமைச்சர் அனிதா ஆனந்த் வருகை குறித்து, 'அவரது வருகை, இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மை உறவுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்; புதிய பங்களிப்பை தரும்' என தெரிவித்தார்.
முன்னதாக, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, அனிதா ஆனந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், இரு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது, அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
இரு நாட்டு மக்களின் நலன்களை பூர்த்தி செய்யும் விதமாக, இந்தியா -- கனடா ஒத்துழைப்பை மீண்டும் கட்டமைக்க வேண்டும். வணிகம், முதலீடு, விவசாயம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், கனிமங்கள் உட்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளும், சர்வதேச விவகாரங்களில் தீவிரமாக செயல்படுவதில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. நாங்கள், 'ஜி - 20' மற்றும் காமன்வெல்த் அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளோம். இந்தோ - -பசிபிக் பகுதியில் எங்கள் ஒருங்கிணைப்பு குறிப்பிடத்தக்கது.
நாங்கள் பயனுள்ள பன்முகத்தன்மை, காலநிலை நடவடிக்கை மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள். வலுவான கூட்டாண்மையை உருவாக்குவதன் வாயிலாக, சர்வதேச பொருளாதாரத்தை ஆபத்தில் இருந்து விடுவிக்க நாங்கள் முயல்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.