14 மனைகளின் பத்திரப்பதிவு ரத்து 'முடா' வசமானது ரூ.62 கோடி நிலம்
14 மனைகளின் பத்திரப்பதிவு ரத்து 'முடா' வசமானது ரூ.62 கோடி நிலம்
ADDED : அக் 02, 2024 01:34 AM

மைசூரு, கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு ஒதுக்கப்பட்ட 14 வீட்டு மனைகளின் பத்திரப்பதிவை, பதிவுத்துறை நேற்று ரத்து செய்தது. இதையடுத்து, 62 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலம், 'முடா' வசமானது.
கர்நாடகாவில் நடக்கும் காங்., ஆட்சியில், முதல்வராக சித்தராமையா பதவி வகிக்கிறார்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மைசூரு நகர மேம்பாட்டு ஆணையமான, 'முடா'வில் இருந்து மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் வாங்கி கொடுத்ததாக, சித்தராமையா மீது மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் மற்றும் அமலாக்க துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இதையடுத்து, பிரச்னைக்குரிய 14 வீட்டுமனைகளை முடாவுக்கு திரும்ப தருவதாக, பார்வதி நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். நேற்று காலை முடா அலுவலகம் சென்ற, சித்தராமையாவின் மகனும், காங்கிரஸ் எம்.எல்.சி.,யுமான யதீந்திரா, முடா கமிஷனர் ரகுநந்தனிடம் பார்வதியின் கடிதத்தை சமர்ப்பித்தார்.
பின் யதீந்திரா கூறுகையில், ''அப்பாவின் நற்பெயரை விட, எங்களுக்கு சொத்து முக்கியம் இல்லை. அப்பா மீது அரசியல் காரணங்களால் பதியப்பட்ட வழக்கால், அம்மா மிகுந்த மன கஷ்டத்தில் உள்ளார்,'' என்றார்.
சித்தராமையா தன், 'எக்ஸ்' பக்கத்தில், 'எனக்கு எதிராக நடக்கும், அரசியல் சதிகளை பொறுத்து கொள்ள முடியாமல், வீட்டுமனைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி, முடாவுக்கு என் மனைவி கடிதம் எழுதி இருப்பது ஆச்சரியமாக உள்ளது. அவரது முடிவை நான் மதிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முடா கமிஷனர் ரகுநந்தன், வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார். 'வீட்டுமனையை தன்னிச்சையாக திரும்ப கொடுத்தால் உடனடியாக பெற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை' என, வக்கீல்கள் ஆலோசனை கூறினர்.
இதையடுத்து, பத்திரப்பதிவு அதிகாரிகள் பார்வதியை நேற்று மாலை ரகசிய இடத்தில் சந்தித்தனர். 14 மனைக்கான பத்திரத்தை, அதிகாரிகளிடம் அவர் வழங்கினார்.
அதை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், மனைகளின் பதிவை உடனடியாக ரத்து செய்தனர்.
இதையடுத்து சர்ச்சைக்குரிய மனைகள் அனைத்தும், முடாவின் கட்டுப்பாட்டில் வந்தன. இந்த மனைகளின் மதிப்பு, 62 கோடி ரூபாய்.
முடா கமிஷனர் ரகுநந்தன் நேற்று இரவு அளித்த பேட்டியில், ''முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி தாமாக முன்வந்து, 14 வீட்டுமனைகளை திருப்பி கொடுத்தார். அதன் பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது, 14 வீட்டுமனைகளும் முடாவின் கீழ் வந்துள்ளன,'' என்றார்.
இதற்கிடையில், கெசரே கிராமத்தில் முடா கையகப்படுத்திய, பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தில், லோக் ஆயுக்தா போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
முதல்வர் மீது புகார் அளித்த, சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணாவும் உடன் இருந்தார்.