'தொழுவத்தை சுத்தம் செய்தால் புற்றுநோய் குணமாகும்'
'தொழுவத்தை சுத்தம் செய்தால் புற்றுநோய் குணமாகும்'
ADDED : அக் 15, 2024 01:45 AM

பிலிபிட், ''பசு தொழுவத்தில் படுத்து கிடந்து, அதை தினமும் சுத்தம் செய்து வந்தால், புற்றுநோய் கூட குணமாகிவிடும்,'' என, உத்தர பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ., அமைச்சர் தெரிவித்தார்.
கோசாலை
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள பிலிபிட் மாவட்டத்தின் நவுகாவா பகடியா என்ற இடத்தில், 55 லட்சம் ரூபாய் செலவில் பசுக்களுக்கான கோசாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதை திறந்து வைத்த மாநில கரும்பு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சஞ்சய் சிங் கங்வார் பேசியதாவது:
இங்குள்ள யாருக்காவது ரத்தக் கொதிப்பு இருந்தால் தினமும் இந்த கோசாலைக்கு வந்து, காலையும் மாலையும், பசுக்களின் முதுகை அன்போடு வருடிவிடுங்கள். 10 நாட்களில் ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் ரத்தக் கொதிப்பு சீரடையும்.
பசு தொழுவத்தை தினமும் சுத்தம் செய்து அங்கே படுத்துக் கிடந்தால், புற்றுநோய் கூட குணமாகும்.
திருமண நாள்
பசு சாணத்தை எரிப்பதனால் கொசு தொல்லை முற்றிலுமாக ஒழியும். பசுவிடம் இருந்து கிடைக்கும் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் மனிதனுக்கு பயன்படக்கடியது.
முஸ்லிம்கள் பண்டிகை காலங்களில் பசு தொழுவத்துக்கு வர வேண்டும்.
அன்றைய தினம் நீங்கள் செய்யும் இனிப்புகளை பசும்பாலில் செய்ய வேண்டும்.
மக்கள் தங்கள் திருமண நாள், குழந்தைகளின் பிறந்த நாள் ஆகியவற்றை பசுக்களுக்கு உணவளித்து கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.