தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது! கர்நாடகா திட்டவட்ட அறிவிப்பு
தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது! கர்நாடகா திட்டவட்ட அறிவிப்பு
UPDATED : மே 01, 2024 05:20 AM
ADDED : மே 01, 2024 02:18 AM

'எங்கள் மாநிலத்தின் தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதால், அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது' என, காவிரி ஒழுங்குமுறை ஆலோசனை கூட்டத்தில், கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
காவிரி ஒழுங்குமுறை குழுவின் 95வது கூட்டம் நேற்று டில்லியில் நடைபெற்றது.
இதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அனைத்து உறுப்பினர்களும், அவர்களது மாநிலங்களின் தலைமைச் செயலகங்களில் இருந்தே பங்கேற்றனர்.
ஆலோசனை
தமிழக அரசின் உறுப்பினராக, தலைமை பொறியாளர் சுப்ரமணியன் பங்கேற்றார்.
ஆலோசனையின்போது, மேட்டூர், பவானி சாகர், அமராவதி அணைகளின் நீர் இருப்பு நிலவரங்கள் தெரிவிக்கப்பட்டன. தமிழகத்துக்கு இதுவரையில் தர வேண்டிய நிலுவை நீரை தர வேண்டுமென, புள்ளிவிபரங்களுடன் எடுத்து கூறப்பட்டது.
'மேட்டூர் அணையில் நீர் இருப்பு 20.182 டி.எம்.சி., மட்டுமே உள்ளது. இதில், 1,200 கன அடி நீர், குடிநீர் தேவை மற்றும் சுற்றுச்சூழல் தேவைக்காக மட்டுமே வெளியேற்றப்படுகிறது.
'மே மாத சுற்றுச்சூழல் நீர் அளவான 2.5 டி.எம்.சி., நீரை, கர்நாடகா திறந்துவிட வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.
மேலும், தமிழகத்துக்கு ஏற்கனவே தர வேண்டிய நீர் அளவான, 5.317 டி.எம்.சி., மற்றும் மே மாதத்தில் தர வேண்டிய 2.5 டி.எம்.சி.,யையும் சேர்த்து, மொத்தமாக தர வேண்டுமென்றும் கேட்கப்பட்டது.
கோரிக்கை
ஆனால், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு, அம்மாநில குடிநீர் தேவைக்காக மட்டுமே போதுமானதாக இருப்பதால், தமிழகத்துக்கு நீர் வழங்க முடியாது என, அம்மாநில உறுப்பினர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இருப்பினும், புள்ளிவிபரங்களை எடுத்துக் கூறி, தமிழகத்தின் கோரிக்கையை ஏற்கும்படி ஒழுங்குமுறை குழு சார்பில், கர்நாடகா தரப்பிடம் வலியுறுத்தப்பட்டது.
அப்போதும், தங்கள் மாநில தேவைகளுக்குத்தான் நீர் உள்ளதென கூறி, இந்த கோரிக்கையை ஏற்க அம்மாநில அரசின் உறுப்பினர் மறுத்து விட்டார். இந்த குழுவின் அடுத்த கூட்டம், வரும் 16ம் தேதி மீண்டும் நடக்கவுள்ளது.
- நமது டில்லி நிருபர் -