டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த பயன்படுத்திய கார்; 11 நாள் முன் வாங்கிய கொடூரன்
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த பயன்படுத்திய கார்; 11 நாள் முன் வாங்கிய கொடூரன்
UPDATED : நவ 12, 2025 04:00 PM
ADDED : நவ 12, 2025 03:02 PM

புதுடில்லி: டில்லியில் குண்டு வெடிப்பு நிகழ்த்த பயன்படுத்திய காரை புல்வாமாவை சேர்ந்த கொலைக்கார டாக்டர் உமர் நபி 11 நாட்களுக்கு முன்பு வாங்கி இருக்கிறான். அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை பரிதாபாத்தில் உள்ள பல்கலையில் நிறுத்தி வைத்துள்ளான்.
தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பபட்ட சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகப்படுகின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள டாக்டர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதில் முக்கிய குற்றவாளியாக புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் நபி பார்க்கப்படுகிறான். கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய கார் கடைசியாக புல்வாமா நபருக்கு கை மாறியது. தற்போதைய உரிமையாளர் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இவர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர். இந்த காரை 11 நாட்களுக்கு முன்பு, உமர் நபி வாங்கி இருக்கிறான்.
அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை பரிதாபாத்தில் உள்ள பல்கலையில் நிறுத்தி வைத்துள்ளான். நவம்பர் 10ம் தேதி காலை பீதி அடைந்த டாக்டர் உமர் நபி டில்லியை நோக்கி ஓட்டி சென்றுள்ளான். அன்று மாலை 6:52 மணியளவில் கார் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டு உள்ளது என புலனாய்வு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.
பல்கலையில் விசாரணை
டில்லி கார் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் (NIA) பரிதாபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தி இருக்கின்றனர். கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர் டாக்டர் உமர் 10 நாட்களாக பல்கலையில் நிறுத்தி வைத்திருந்த பின்னணி குறித்து புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

