UPDATED : அக் 26, 2026 07:51 PM
ADDED : அக் 26, 2026 07:46 PM
பெர்லின்: ஜெர்மனியில் சுற்றுலா சென்ற பிரமாண்ட பயணியர் சொகுசு கப்பல் மோதி சரக்கு கப்பலில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் பிரெமர்ஹேவன் துறைமுகத்தில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கி, 'மைன் ஷிப் – 3' என்ற 96-0 அடி நீளமுள்ள பிரமாண்ட சொகுசு கப்பல் சுற்றலாவுக்காக புறப்பட்டது. அந்த கப்பலில் 2,428 பயணியர் மற்றும் 922 ஊழியர்கள் இருந்தனர்.
கப்பல் புறப்பட்ட சமயத்தில் ஜெர்மனியின் வடகடல் பகுதியில் 'மான்ஜா' புயல் காற்று வீசி வந்ததால், கடலில் கடுமையான சீற்றம் காணப்பட்டது. பலத்த காற்றால் நிலைதடுமாறி, கப்பலின் முன்பகுதி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த ‘எம்.எஸ்.சி., விக்டோரின்’ என்ற சரக்குக் கப்பல் மீது மோதியது.
இதில் சரக்கு கப்பலின் பக்கவாட்டில், 32 அடி நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டது. சொகுசு கப்பலில் இருந்த சில உயிர் காக்கும் படகுகளும் சேதமடைந்தன. பயணி ஒருவர் தன் செல்போனில் பதிவு செய்த வீடியோவில், சொகுசு கப்பலின் மேற்பகுதி சரக்கு கப்பலின் மீது உரசிச் செல்வதும், பயணியர் அச்சத்துடன் கூச்சலிடுவதும் பதிவாகியுள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து, 20 நாள் சுற்றுலா பயணமாக புறப்பட்ட சொகுசு கப்பல் உடனடியாக, துறைமுகத்திற்கே பத்திரமாக திருப்பி அழைத்து வரப்பட்டது.
