ஆந்திரா கோவிலில் குத்தாட்டம்: புத்தாண்டு கொண்டாடிய ஊழியர்கள் மீது வழக்கு
ஆந்திரா கோவிலில் குத்தாட்டம்: புத்தாண்டு கொண்டாடிய ஊழியர்கள் மீது வழக்கு
UPDATED : ஜன 06, 2026 06:32 PM
ADDED : ஜன 06, 2026 06:04 PM

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோவில் அன்னசத்திரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குத்தாட்டம் போட்ட ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீபிரமராம்பா மல்லிகார்ஜூன சுவாமி கோவில், 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக விளங்குகிறது.இக்கோவிலின் கட்டுப்பாட்டில் அன்னசத்திரம் செயல்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு இலவசமாக இங்கு உணவு வழங்கப்பட்டு வந்தது.
இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடந்த புத்தாண்டு அன்று சினிமா பாடல்கள் மற்றும் குத்தாட்ட பாடல்களை ஒலிக்க விட்டு நடனமாடி வீடியோ எடுத்தனர். அதனை, வீடியோவாக பதிவு செய்து சமுக ஊடகங்களில் வெளியிட்டனர். இது கோவிலின் தலைமை பாதுகாப்பு அதிகாரியின் கவனத்துக்கு வந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவிலின் விதிகள் மீறப்பட்டுள்ளது குறித்து அறநிலையத்துறை சட்டப்படி விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்ரீசைலம் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராவ் கூறியதாவது: கோயில் அல்லது அதனுடன் தொடர்புடைய இடங்களில் நடனமாடுவது அல்லது ரீல்ஸ் எடுப்பது ஆகியன தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். புனிதமான வழிபாட்டு மையத்தில் ஊழியர்கள் ஆபாச நடனமாடினர். இது பக்தர்களின் மத உணர்வுகளுக்கு எதிரானது. தெளிவான விதிமுறைகள் இருந்தும் அதனை மீறி அதிகாரிகள், ஊழியர்கள் நடனமாடினர். இதனால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
அன்னசத்திரத்தின் சேர்மன் ஷியாம் கூறியதாவது: ஊழியர்களின் நடவடிக்கை பக்தர்களின் மத உணர்வை காயப்படுத்துகிறது. விசாரணைக்கு பிறகு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

